IND vs SA: "எந்த இடத்தில் இறங்கினாலும் அடிப்பேன் ஆனால்..".. சாம்சனுக்கு வேட்டு வைத்த இஷான் கிஷன்!
நவி மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வெறும் 20 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டிய இஷான் கிஷன், போட்டிக்குப் பிறகு தனது பேட்டிங் நிலை மற்றும் உலகக்கோப்பைத் திட்டம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இதில் தொடக்க வீரராகக் களமிறங்கிய இஷான் கிஷன் 20 பந்துகளில் 53 ரன்கள் குவித்து, உலகக்கோப்பைக்கான தனது இடத்தையும் ஏறக்குறைய உறுதி செய்துள்ளார்.

ஓப்பனிங் இறங்கவே ஆசை
போட்டி முடிந்த பிறகு தனது ஆட்டம் குறித்துப் பேசிய இஷான் கிஷன், "இன்றைய போட்டிக்காக நான் மிகவும் ஆவலுடன் காத்திருந்தேன். எனக்குத் தொடக்க வீரராகக் களமிறங்கவே விருப்பம். மூன்றாவது இடத்தில் ஆடுவதையும் நான் ரசித்தேன். ஆனால் உலகக்கோப்பைத் தொடர் வரவிருப்பதால், நான் எந்த வரிசையில் இறங்கினாலும் அணிக்காகச் சிறந்த பங்களிப்பை அளிப்பதே எனது முக்கிய நோக்கம்" என்று கூறினார். இதன் மூலம் சஞ்சு சாம்சனின் துவக்க வீரர் என்ற இடத்தை தான் பெற விரும்புவதை வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்.
திட்டம் இதுதான்
தனது பேட்டிங் அணுகுமுறை குறித்துப் பேசிய இஷான் கிஷன், "நிகழ்காலத்தில் இருப்பதுதான் முக்கியம். பந்தைக் கூர்ந்து கவனித்து, அந்தத் தருணத்தில் என்ன ஷாட் தேவையோ அதை மட்டும் ஆடுகிறேன். அதிகப்படியான சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதில்லை. பந்தைப் பார்த்து அதற்கு ஏற்றார் போல விளையாடுகிறேன். இது எனக்குக் கைகொடுக்கிறது" என்றார்.
மேலும், "இன்று ஆடுகளம் பேட்டிங் செய்ய மிகச் சிறப்பாக இருந்தது. இரண்டாவது பாதியில் கூட ஆடுகளம் ஒத்துழைத்தது. பவுன்ஸை நம்பி நான் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். உலகக்கோப்பை நெருங்கிவிட்டதால், ஃபீல்டர்கள் இருந்தாலும் பரவாயில்லை, நம்மை நம்பி ஷாட் அடிக்க வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறேன்" என்று இஷான் கிஷன் தெரிவித்தார்.
திலக் வர்மாவுக்குப் பாராட்டு
தனது சக வீரரான திலக் வர்மாவைப் புகழ்ந்து பேசிய இஷான், "அவர் எங்களுக்கு மிக முக்கியமான வீரர். அவர் வெறும் பேட்ஸ்மேன் மட்டுமல்ல, தேவைப்படும்போது சில ஓவர்களை வீசவும் செய்கிறார். குறிப்பாக இரண்டு இடதுகை பேட்ஸ்மேன்கள் ஆடும்போது அவர் பந்துவீசுவது அணிக்கு உதவியாக உள்ளது. அவர் ஒரு சிறந்த ஃபீல்டர். மூன்றாவது இடத்தில் ஸ்ட்ரைக்கை மாற்றி அமைப்பதில் அவர் வல்லவர்" என்று கூறினார்.
முன்னதாக, இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, இஷான் கிஷன் (53), திலக் வர்மா (45), ஹர்திக் பாண்டியா (30) மற்றும் அக்சர் படேல் (35) ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்களில் 240 ரன்கள் குவித்தது. இமாலய இலக்கைத் துரத்திய தென்னாப்பிரிக்கா அணி 210 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மொத்தம் 9 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தினார். அபிஷேக் சர்மா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலகக்கோப்பையை உற்சாகத்துடன் எதிர்கொள்ளத் தயாராகியுள்ளது.


Click it and Unblock the Notifications