மும்பை : இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருக்கும் இஷான் கிஷன் தான் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக பிசிசிஐ-யிடம் கூறி இருக்கிறார்.
இஷான் கிஷன் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து தெரியவில்லை. ஆனால், தனிப்பட்ட காரணங்களால் இஷான் கிஷன் டெஸ்ட் தொடரில் இருந்து விலகி இருப்பதாக பிசிசிஐ வட்டாரம் தெரிவித்து இருக்கிறது.
இஷான் கிஷன் 2023 உலகக்கோப்பை தொடருக்கு முன்பே பல முறை டி20 மற்றும் ஒருநாள் அணியில் அவ்வப்போது இடம் பெற்று சிறப்பாக ஆடி இருந்தார். ஆனாலும், 2023 உலகக்கோப்பை தொடரில் அவர் மாற்று வீரராக இரண்டு போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார்.

உலகக்கோப்பை தொடர் முடிந்த உடன் நடந்த ஆஸ்திரேலிய டி20 தொடரிலும் மூன்று போட்டிகளில் மட்டுமே ஆடிய அவர் அதன் பின் ஓய்வு அளிக்கப்பட்டு, ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழி விட்டார். அதன் பின் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரிலும் அவருக்கு போட்டியில் ஆடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் டெஸ்ட் அணியில் இருந்து இஷான் கிஷன் விலகி இருக்கிறார். டெஸ்ட் அணியில் மாற்று விக்கெட் கீப்பராகவே இஷான் கிஷன் சேர்க்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. கே எல் ராகுல் தான் அணியின் விக்கெட் கீப்பராக போட்டியில் பங்கேற்பார் என கூறப்படுகிறது. இந்த நிலையில், இஷான் கிஷன் தனக்கு வாய்ப்பு கிடைக்காது என்பது தெரிந்து விலகினாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இஷான் கிஷன் விலகி உள்ள நிலையில் கே எஸ் பாரத்துக்கு அணியில் டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாரத் ஏற்கனவே டெஸ்ட் அணியில் இடம் பெற்றவர் தான். ரிஷப் பண்ட் அணியில் இருந்ததால் வாய்ப்பு இல்லாமல் இருந்தார். தற்போது அவருக்கு மாற்று வீரராக வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஏற்கனவே, முகமது ஷமி காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய நிலையில் தற்போது இஷான் கிஷனும் விலகி இருக்கிறார். இந்த மாற்றங்களுக்கு பிறகு அறிவிக்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி -
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், கே எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), பிரசித் கிருஷ்ணா, கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்).