கொல்கத்தா: ஈடன் கார்டன் மைதானத்தில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் 124 ரன்கள் என்ற எளிய இலக்கைத் துரத்த முடியாமல், வெறும் 93 ரன்களுக்குச் சுருண்டு இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் அதிரடி வீரர் கெவின் பீட்டர்சன், இந்திய வீரர்களின் பேட்டிங் அணுகுமுறையையும், தற்கால கிரிக்கெட்டின் போக்கையும் கடுமையாகச் சாடி, ஒரு காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இந்திய அணியின் தோல்விக்கு காரணம் பேட்ஸ்மேன்களிடம் சரியான டெக்னிக் இல்லாதது தான் எனவும், சிக்ஸ், சுவிட்ச் ஹிட் ஆகியவற்றை அடிக்க கற்றுக் கொண்டு பேங்க் பேலன்ஸை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள் என்றும் அவர் ஐபிஎல் மற்றும் டி20 க்கு மட்டுமே பேட்ஸ்மேன்கள் பயிற்சி செய்வதாக பீட்டர்சன் கூறியிருப்பது, இந்திய பேட்ஸ்மேன்களின் டெக்னிக் குறித்த விவாதத்தை மீண்டும் பற்ற வைத்துள்ளது.

இந்தியா அடைந்த அதிர்ச்சித் தோல்வி குறித்து, ஞாயிற்றுக்கிழமை தனது ட்விட்டர் (தற்போது X) பக்கத்தில் ஒரு நீண்ட பதிவை வெளியிட்ட பீட்டர்சன், தனது கோபத்தை வெளிப்படுத்தினார். அதில் அவர் குறிப்பிட்டதாவது:
"கொல்கத்தாவில் ஆடுகளத்தைப் பார்த்தேன், ஸ்கோரைப் பார்த்தேன், முடிவையும் பார்த்தேன். இந்தத் தோல்விக்குத் தற்கால பேட்ஸ்மேன்களின் டெக்னிக்தான் காரணம் என்று மட்டுமே சொல்ல முடியும். இப்போதெல்லாம் பேட்ஸ்மேன்கள் சிக்ஸர்கள் அடிக்கவும், ஸ்விட்ச்-ஹிட் ஆடவும்தான் கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் ஒரு இன்னிங்ஸைக் கட்டமைக்கவோ, 'சர்வைவல்' என்ற கலையைக் கற்றுக்கொள்ளவோ வளர்வதில்லை."
தனது விமர்சனத்தில் வீரர்களை மட்டும் குறை கூறாத பீட்டர்சன், தற்போதைய கிரிக்கெட் அமைப்பையே கடுமையாகச் சாடினார். "இது ஒரு நிதர்சனமான உண்மை. வீரர்களுக்கு பயிற்சியில் என்ன கற்றுக்கொடுக்கப்படுகிறது என்பது எனக்குத் தெரியும். இதில் வீரர்களைக் குறை சொல்ல முடியாது, தற்கால கிரிக்கெட்டின் போக்கே இதுதான்"
"கிரிக்கெட்டில் இப்போது நிலைத்து நின்று ஆடுவதற்கோ, சுழற்பந்தை எதிர்கொள்ளும் கலைக்கோ முக்கியத்துவம் இல்லை. பிரகாசமான விளக்குகள், காதைக் கிழிக்கும் இசை, கிரிக்கெட் வாரியங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்களின் பண லாபம்... இதுதான் இன்றைய கிரிக்கெட்"
"இப்போதைய கிரிக்கெட் பணத்தை சுற்றித் தான் இருக்கிறது. ஆனால், அதைப்பற்றி யாரும் பேச மாட்டார்கள். ஆனால், நான் பேசுவேன், ஏனென்றால் அதுதான் உண்மை. வீரர்களுக்கு அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணம் சம்பாதிக்க சக்தி கிடைக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன்."
"முடிவு எடுப்பவர்கள் என்ன முடிவை எடுக்கிறார்களோ அதைதான் நீங்கள் செய்கிறீர்கள். ஆனால், உங்களால் அதைப் பற்றி பேசத்தான் முடியாது. தொடர்ந்து சிக்ஸ் அடியுங்கள், சுவிட்ச் ஹிட் அடியுங்கள். உங்கள் வங்கிக் கணக்கை வளர்த்துக் கொள்ளுங்கள் வீரர்களே" என்று கெவின் பீட்டர்சன் கிரிக்கெட்டின் லாப நோக்கத்தால் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து வருவதை பற்றி கூறி இருக்கிறார்.
பீட்டர்சனின் இந்த விமர்சனத்திற்கு, இந்திய அணியின் சமீபத்திய செயல்பாடுகளும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. சொந்த மண்ணில் விளையாடிய கடைசி 6 டெஸ்ட் போட்டிகளில், இது இந்தியாவின் 4-வது தோல்வியாகும். கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆனதும் இதில் அடங்கும்.
சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களைத் தயாரித்து எதிரணியை வீழ்த்தும் இந்தியாவின் வியூகமே, தற்போது அவர்களுக்கே எதிராகத் திரும்புவது, இந்திய பேட்ஸ்மேன்களின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளும் திறன் மீது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. ஒருபுறம், தென் ஆப்பிரிக்கக் கேப்டன் டெம்பா பவுமா, அதே சிதறும் ஆடுகளத்தில் நிதானமாக ஆடி 55 ரன்கள் குவித்து அணிக்கு வலு சேர்த்த நிலையில், இந்திய வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்தது, பீட்டர்சனின் விமர்சனத்தை மேலும் வலுப்படுத்துகிறது.