செஞ்சுரியன் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கே எல் ராகுல் சதம் அடித்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினார்.
மிகக் கடினமான பிட்ச்சில், அதிகம் எகிறிய பந்துகளை சமாளித்து ஆடி ராகுல் சதம் அடித்த நிலையில், வரலாறு உன்னை மறக்காது என ரசிகர்கள் ராகுலை பாராட்டி வருகிறார்கள்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது. அந்த மைதானத்தில் எப்போதும் பவுன்ஸ் மிக அதிகமாக இருக்கும். அதன் காரணமாகவே தென்னாப்பிரிக்கா எப்போதும் டெஸ்ட் போட்டிகளை அந்த மைதனத்தில் நடக்கும் வகையில் தங்களின் டெஸ்ட் தொடர்களை வடிவமைக்கும்.
தற்போது இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று உள்ள நிலையில் அதில் முதல் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்க்ஸில் கோலி, ரோஹித், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட முதல் ஐந்து பேட்ஸ்மேன்கள் பவுன்ஸ் பந்துகளை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 107 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தனர்.
ஆனால், ராகுல் பேக்ஃபுட்டில் ஆடி பவுன்ஸ் பந்துகளை எளிதாக சமாளித்து தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களுக்கு கடும் அழுத்தத்தை கொடுத்தார். பின்வரிசை வீரர்களை வைத்துக் கொண்டே அவர் 90 ரன்களை குவித்தார். 101 ரன்கள் குவித்து அவர் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் தன் ஏழாவது சதத்தை பதிவு செய்தார்.
இதில் கடினமான செஞ்சுரியன் பிட்ச்சில் அவர் ஏற்கனவே 2021இல் ஒரு முறை சதம் அடித்து இருந்தார். தற்போது மீண்டும் சதம் அடித்து தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். இதை அடுத்து சமூக வலைதளங்களில் அவரை பாராட்டித் தள்ளி வருகிறார்கள். வரலாறு இந்த சதத்தை மறக்காது என பலரும் குறிப்பிட்டு ராகுலை பாராட்டி வருகின்றனர். இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 245 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ரபாடா 5 விக்கெட் வீழ்த்தினார். அறிமுக வேகப் பந்துவீச்சாளர் பர்கர் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.