விசாகப்பட்டினம்: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 271 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்திருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து ஆட்டத்தின் முதல் ஓவரிலே தென் ஆப்பிரிக்கா தொடக்க வீரர் ரியான் ரிக்கில்டன் டக் அவுட் ஆனார். இதனை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குயிண்டன் டி காக், கேப்டன் பவுமா ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 113 ரன்களை பார்ட்னர்ஷிப் சேர்த்தனர்.

பவுமா 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். நடு வரிசையில் மேத்யூ பிரிட்ஸ்கி 24 ரன்களிலும், எய்டன் மார்க்கரம் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்க மறுமுனையில் சிறப்பாக விளையாடிய குயிண்டன் டிகாக் 80 பந்துகளில் தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய குயிண்டன் டி காக் 80 பந்துகளில் தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார்.
குயிண்டன் டி காக் தனியாலாக போட்டியை மாற்றி விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்து வீச்சில் அவர் 106 ரன்களில் ஆட்டம் இழந்தார். முக்கிய கட்டத்தில் பிரவீஸ் மற்றும் மார்க்கோ ஜான்சன், கார்பின் போஸ் ஆகியோர் குல்தீப் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி தடுமாறியது. இறுதியில் 47.5 ஓவரில் தென்னாபிரிக்க அணி 270 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய பந்துவீச்சு தரப்பில் குல்தீப் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் அணில் கும்ப்ளே, ஸ்ரீநாத் ஆகியோரின் சாதனையை குல்தீப் யாதவ் முறியடித்திருக்கிறார்.
இருவரும் தலா 10 முறை நான்கு விக்கெட்டுகளை ஒரே போட்டியில் வீழ்த்திய நிலையில், குல்தீப் யாதவ் 11 முறை வீழ்த்தி இருக்கிறார். சமி 16 முறையுடன் முதலிடத்திலும், தற்போதைய தேர்வு குழு தலைவர் ஆன அஜித் அகர்கர் 12 முறையும், ஒரே போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்றனர்.