ராஞ்சி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் மீம்ஸ் மழை பொழிந்து வருகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மாவின் அதிரடி, கே.எல்.ராகுலின் கேப்டன்சி மற்றும் தென்னாப்பிரிக்காவின் போராட்டம் என அனைத்தையும் வைத்து நெட்டிசன்கள் இணையத்தை கலக்கி வருகின்றனர்.
இந்த போட்டியில் கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கில் அதிரடியாக 60 ரன்கள் குவித்தார். விக்கெட் கீப்பராக 4 கேட்சுகளை பிடித்தார். கேப்டனாகவும் அணியை வெற்றி பெற வைத்தார். இதைப் பார்த்த சில ரசிகர்கள், "தோனியை பார்த்தது போலவே இருக்கிறது" என்று உருகி வருகின்றனர். "பேட்டிங், கீப்பிங், கேப்டன்சி என அனைத்திலும் தல தோனி போலவே ராகுலும் கலக்குகிறார்," என்று ராகுலை வைத்து மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.

இந்திய அணி 349 ரன்கள் குவித்தாலும், தென்னாப்பிரிக்கா சளைக்காமல் விரட்டியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவை என்ற நிலை வரை ஆட்டம் சென்றது. இதைப் பார்த்த ரசிகர்கள், சுப்ரமணியபுரம் பாணியில், "சாவு பயத்தை காட்டிட்டான் பரமா.." என்று மீம்ஸ் போட்டு, கடைசி நேர திக்-திக் நிமிடங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவின் முக்கிய விக்கெட்டுகள் விழுந்தாலும், பின்வரிசை வீரர்கள் இந்திய பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்தனர். விக்கெட் எடுக்க முடியாமல் இந்தியா திணறியதை, 'பிரண்ட்ஸ்' படத்தில் வடிவேலுவிடம் வேலை பார்ப்பவர்கள் அந்த பழைய கடிகாரத்தை உடைப்பார்களே, அந்த காட்சியோடு ஒப்பிட்டு, "பழசு தானேங்க.. நான் கூட புதுசோன்னு நினைச்சுட்டேன்" என்று கலாய்த்து வருகின்றனர்.
விராட் கோலி 135 ரன்கள் குவித்து, சர்வதேச கிரிக்கெட்டில் தனது 83-வது சதத்தைப் பதிவு செய்தார். தற்போது கிரிக்கெட் விளையாடி வருபவர்களில் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஜோ ரூட் 58 சதங்கள் மட்டுமே அடித்துள்ளார்.
இவ்வளவு பெரிய இடைவெளியில் கோலி முன்னிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி, தன்னை விமர்சித்த அல்லது டெஸ்ட் அணியில் இருந்து ஓரங்கட்டிய கவுதம் கம்பீரை, விராட் கோலி தட்டிக் கொடுப்பது போலவும், "இன்னும் நான் ராஜாவா தான் இருக்கேன்" என்று சொல்வது போலவும் மீம்ஸ்கள் பறக்கின்றன.
ரோஹித் சர்மா கடந்த 5 இன்னிங்ஸ்களில் 1 சதம் மற்றும் 3 அரைசதங்கள் அடித்து ஃபார்மில் உள்ளார். நேற்றைய போட்டியிலும் 57 ரன்கள் விளாசினார். இதை வைத்து, நடிகர் சிம்புவின் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி, "இப்போ என்னை அணியை விட்டு வெளியே அனுப்புங்க பாப்போம்.." என்று ரோஹித் சவால் விடுவது போல மீம்ஸ் போட்டு தெறிக்க விடுகின்றனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு வாய்ப்பு கிடைத்தும், ருதுராஜ் கெய்க்வாட் 14 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் விரக்தியடைந்த ரசிகர்கள், "இனிமே நான் பேட்டிங் ஆடவா? இல்ல பழைய மாதிரி வாட்டர் பாட்டில் மட்டும் தூக்கிட்டு வரவா?" என்று ருதுராஜ் கேட்பது போல மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்திய அணி கடந்த 19 ஒருநாள் போட்டிகளாகத் தொடர்ந்து 'டாஸ்' தோற்று வருகிறது. இப்படி ஒரு சம்பவம் நடக்க 5,24,288 வாய்ப்புகளில் ஒரு முறைதான் சாத்தியமாம் (Probability). "அது எப்படி நமக்கு மட்டும் இப்படி நடக்குது?" என்று ரசிகர்கள் சந்தேகத்துடன் முறைத்துப் பார்ப்பது போன்ற மீம்ஸ்கள் இணையத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தி வருகின்றன.