Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: இந்தியாவின் தோல்வியை சிரித்து ரசித்த அமீர்.. பாராட்டிய யூசுப்.. திருந்தாத பாகிஸ்தான்

லாகூர்: 2026 டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் இந்தியாவின் தோல்வி ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் இதனைக் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் நேரலையில் சிரித்து மகிழ்ந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கைகொட்டிச் சிரித்த அமீர்

இந்தப் போட்டி முடிந்த பிறகு பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற முகமது அமீரை, அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் 'ஜோதிடர்' என்று அறிமுகப்படுத்தினார். இதைக் கேட்டவுடன் அமீர் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினார். முன்னதாக, இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறாது என்றும், தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளே அந்த இடத்தைப் பிடிக்கும் என்றும் அமீர் கணித்திருந்தார். மேலும், இந்தியத் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா திறமையற்றவர் என்றும், அவர் கண்ணை மூடிக்கொண்டு சுற்றும் ஒரு வீரர் மட்டுமே என்றும் விமர்சித்திருந்தார்.

IND vs SA Mohammad Amir Mocks India s Defeat to South Africa in 2026 T20 World Cup Mohammad Yousuf Joins

அமீரின் இந்தக் கணிப்புகள் தற்போது உண்மையாகி வருவதால், நிகழ்ச்சித் தொகுப்பாளர் அவரைப் பாராட்டினார். "மைதானத்தில் பாகிஸ்தான் அணியால் செய்ய முடியாததை, லாகூர் ஸ்டூடியோவில் அமர்ந்து கொண்டு நமது முன்னாள் வீரர்கள் செய்து வருகின்றனர். இந்தியா அரையிறுதிக்கு வராது என்று அமீர் சொன்னதை இந்திய அணி கேட்பது போல் தெரிகிறது" என்று தொகுப்பாளர் கிண்டலாகக் குறிப்பிட்டார்.

பாராட்டிய முகமது யூசுப்

இந்தியாவின் இந்தச் சரிவை முகமது அமீர் மட்டுமின்றி, பாகிஸ்தான் ஜாம்பவான் முகமது யூசுப்பும் விமர்சித்துள்ளார். அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அமீரைப் பாராட்டிப் பதிவிட்டுள்ளார். அதில், "களத்தில் பந்துவீச்சு மூலம் இந்தியாவை மிரட்டிய நீங்கள், இப்போது ஸ்டூடியோவில் இருந்தபடியே அவர்களை நிலைகுலையச் செய்கிறீர்கள். அவர்களைச் சற்று நிம்மதியாக மூச்சு விட அனுமதியுங்கள்" என்று பதிவிட்டுள்ளார். மேலும், தென்னாப்பிரிக்க அணியின் ஆட்டத்தைப் பாராட்டிய யூசுப், அவர்கள் கடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கியுள்ளார்கள் என்று குறிப்பிட்டார்.

அமீரின் விளக்கம்

தனது கணிப்பு குறித்துப் பேசிய அமீர், "நான் இந்தியா ஒரு மோசமான அணி என்று சொல்லவில்லை. ஆனால் அவர்களின் பேட்டிங் வரிசையின் செயல்பாடு மற்றும் அணியின் ஒட்டுமொத்த அணுகுமுறையை வைத்தே நான் அவ்வாறு கணித்தேன். என்னைப்பொறுத்தவரை இந்தியாவை விடத் தென்னாப்பிரிக்காவும் வெஸ்ட் இண்டீஸும் சிறந்த அணிகளாகத் தெரிகின்றன. அதனால்தான் இந்தியா அரையிறுதிக்கு வராது என்று கூறினேன்" என்று கூறினார்.

சிக்கலில் இந்தியா

தென்னாப்பிரிக்காவிடம் வாங்கிய அடியால் இந்தியாவின் ரன் ரேட் -3.800 ஆகக் குறைந்துள்ளது. 188 ரன்களைத் துரத்திய இந்தியா 111 ரன்களுக்குச் சுருண்டது. இஷான் கிஷன், திலக் வர்மா, அபிஷேக் சர்மா என முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். சிவம் துபேவின் 42 ரன்கள் மட்டுமே ஆறுதலாக இருந்தது. அடுத்ததாக ஜிம்பாப்வே அணியை இந்தியா சென்னையில் எதிர்கொள்ளவுள்ளது. அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைக்க இந்தியா இனி வரும் போட்டிகளில் பெரிய வித்தியாசத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Story first published: Monday, February 23, 2026, 11:19 [IST]
Other articles published on Feb 23, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+