மும்பை : தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இடம்பெற்று இருக்கும் முகமது ஷமி தென்னாப்பிரிக்காவுக்கு போவதே சந்தேகம் தான் என தெரிய வந்துள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அதில் வேகப் பந்துவீச்சாளர்களாக முகமது ஷமி, பும்ரா ஆகியோருடன் மேலும் நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் பெயர்கள் இடம் பெற்று இருந்தது. வேகப் பந்துவீச்சில் நீண்ட அனுபவம் கொண்ட ஷமி, பும்ரா இருப்பதால் தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியா டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடும் என ரசிகர்கள் நினைத்தனர்.

ஆனால், முகமது ஷமி அந்த டெஸ்ட் தொடரில் ஆடுவதே சந்தேகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த டெஸ்ட் அணி அறிவிப்பின் போதே பிசிசிஐ, முகமது ஷமி காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை எடுத்து வருகிறார் என குறிப்பிட்டு இருந்தது. தற்போது அவரது நிலைமை மோசமாக உள்ளதாக சில செய்திகள் வெளியாகி உள்ளன.
அதில் மும்பை விமான நிலையத்திற்கு காரில் வந்த முகமது ஷமி கீழே இறங்கி நடக்கும் போது காலை ஊன்ற சிரமப்பட்டு சென்றார் என கூறப்பட்டுள்ளது. அதனால், அவர் தென்னாப்பிரிக்கா செல்ல வாய்ப்பு குறைவு தான். ஷமி இல்லாமல் வேகப் பந்துவீச்சாளர்களாக யார் அணியில் இடம் பெறுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அந்த அணியில் தற்போது பும்ரா, ஷமி தவிர்த்து முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார் ஆகியோர் உள்ளனர். இந்த நால்வரில் பும்ராவுடன் சிராஜ் மற்றும் முகேஷ் குமார் இணைந்து அணியில் இடம் பெறவே வாய்ப்பு அதிகம். இந்தியா நான்கு வேகப் பந்துவீச்சாளர்களை போட்டியில் விளையாட வைக்க நினைத்தால் ஷர்துல் தாக்கூர் அணியில் இடம் பெறலாம்.
தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி : ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கே எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், முகேஷ் குமார், முகமது. ஷமி*, ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), பிரசித் கிருஷ்ணா.