டர்பன்: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்ட போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒலிபெருக்கி பாதியில் நின்று போனது. அதன் பின் இந்திய வீரர்கள் தாங்களாகவே தேசிய கீதத்தை பாடி முடித்தனர். அவர்கள் பாடி முடித்தவுடன் மீண்டும் தேசிய கீதம் ஒலிபரப்பானது. அதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் பின் இரு அணி வீரர்களும் வரிசையாக நின்றனர். இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் தேசிய கீதங்கள் ஒளிபரப்பப்பட்டது. அப்போது இந்தியாவின் தேசிய கீதம் ஒளிபரப்பப்பட்ட போது ஒலிபெருக்கி பாதியில் நின்று போனது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இப்படி நடந்து இருக்கலாம் என்பதை ஊகித்த இந்திய வீரர்கள், அந்த சூழ்நிலையை சமாளித்து தேசிய கீதத்தை சத்தமாக பாடி முடித்தனர். மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்களும் ஒரே நேரத்தில் தேசிய கீதத்தை சத்தமாக பாடினர். அது நெகிழ்ச்சி அளிக்கும் விஷயமாகவும் அமைந்தது.
ஆனால், தேசிய கீதத்தை பாடி முடித்தவுடன் மீண்டும் ஒலிபெருக்கியில் தேசிய கீதம் ஒலிபரப்பானது. அதனால், இந்திய வீரர்கள் மீண்டும் தேசிய கீதத்தை பாடினர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தேசிய கீதத்தை அவமரியாதை செய்வதாகும். இதே சம்பவம் இந்தியாவில் நடைபெற்று இருந்தால் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருக்க முடியும்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பி உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்தது. சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து இருந்தார். திலக் வர்மா 18 பந்துகளில் 33 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 17 பந்துகளில் 21 ரன்களும் எடுத்து இருந்தனர்.
இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 17.5 ஓவர்களில் 141 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது.