கேப்டனாக முதல் வெற்றி.. எங்களின் திட்டமே வேற.. எனக்கும் இது சர்ப்ரைஸ் தான்.. கேஎல் ராகுல் பேச்சு!
ஜொகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்கா மண்ணில் முதல் வெற்றியை கேப்டனாக பெறுவதில் மகிழ்ச்சி என்று இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 27.3 ஓவர்களில் வெறும் 116 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி தரப்பில் கடைசி வரை களத்தில் இருந்த சாய் சுதர்சன் 43 பந்துகளில் 55 ரன்களை விளாசினார். அதேபோல் சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்கள் எடுத்து அசத்தினார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
கடந்த முறை தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து கேஎல் ராகுல் தலைமையில் இந்திய அணி விளையாடிய போது, ஒரு போட்டியில் கூட வெற்றிபெறவில்லை. இந்த போட்டியின் மூலம் தென்னாப்பிரிக்கா மண்ணில் கேஎல் ராகுல் முதல்முறையாக கேப்டனாக வென்றுள்ளார். இந்த வெற்றி குறித்து கேப்டன் கேஎல் ராகுல் பேசுகையில், இந்திய வீரர்களின் செயல்பாடுகள் நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. நிச்சயம் தென்னாப்பிரிக்கா மண்ணில் வெற்றிபெறுவது கொஞ்சம் கூடுதல் மகிழ்ச்சி தான்.
ஏனென்றால் கடந்த முறை நாங்கள் வந்த போது ஒரு போட்டியில் கூட வெற்றிபெறவில்லை. நாங்கள் எதிர்பார்த்ததை போல் அல்லாமல் இன்றைய ஆட்டம் மொத்தமாக ஆச்சரியமளிக்கும் வகையில் இருந்தது. ஸ்பின்னர்களை விரைவாக கொண்டு வர வேண்டும் என்பதே எங்களின் திட்டமாக இருந்தது. ஆனால் இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். இன்னும் சொல்ல போனால் லைன் மற்றும் லெந்தில் ஒழுக்கமாக இருந்தனர்.
இந்த ஆடுகளத்தில் பால் தொடர்ந்து ஸ்விங்காகி கொண்டே இருந்தது. இந்திய அணியை பொறுத்தவரை தொடர்ந்து அதிகளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறோம். அதனால் எப்போதும் ஒரேயொரு வடிவிலான கிரிக்கெட்டுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்படும். தற்போது எங்களின் கவனத்தில் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே உள்ளது. ஒவ்வொரு வீரரும் இந்தியாவுக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சர்வதேச கிரிக்கெட் அனுபவத்திற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சியானது என்று கூறியுள்ளார்.
Story first published: Sunday, December 17, 2023, 18:50 [IST]
Other articles published on Dec 17, 2023


Click it and Unblock the Notifications