IND vs SA: பிரேவிஸை மிரட்டிய இந்திய பவுலருக்கு ஐசிசி தண்டனை.. ஓவரா போனதால் சிக்கிய ஹர்ஷித் ராணா
ராஞ்சி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவின் வரம்பு மீறிய செயல் அவருக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் எதிரணி வீரர் டெவால்ட் பிரேவிஸை நோக்கி ஆக்ரோஷமாக நடந்து கொண்டதற்காக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அவருக்குத் தண்டனை வழங்கியுள்ளது.
ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆனால், அவரது கொண்டாட்டம் தான் இப்போது சர்ச்சையாகியுள்ளது.

என்ன நடந்தது?
போட்டியின் 22-வது ஓவரில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. அதற்கு முந்தைய ஓவரில் ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் டெவால்ட் பிரேவிஸ் ஒரு 'நோ-லுக்' சிக்ஸர் அடித்திருந்தார். இதனால் கடுப்பான ராணா, அடுத்த ஓவரில் பிரேவிஸை வீழ்த்தினார்.
விக்கெட் விழுந்த உடனேயே ஆக்ரோஷத்தின் உச்சிக்குச் சென்ற ராணா, பிரேவிஸை நோக்கித் தகாத வார்த்தைகளைப் பேசியபடியும், "டிரெஸ்ஸிங் ரூமுக்கு நடையைக் கட்டு" என்பது போலவும் கையால் சைகை காட்டினார். இது மிகவும் அநாகரிகமான செயலாகக் கருதப்பட்டது.
ஐசிசி வழங்கிய தண்டனை
ஹர்ஷித் ராணாவின் இந்தச் செயல், ஐசிசி நடத்தை விதிமுறை (Code of Conduct) பிரிவு 2.5-ஐ மீறியதாகும். அதாவது, ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழந்த பிறகு அவரை வம்புக்கு இழுப்பது அல்லது அவமானப்படுத்தும் வகையில் சைகை காட்டுவது குற்றமாகும்.
இதன் காரணமாக, ஹர்ஷித் ராணாவுக்கு ஐசிசி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் அவரது ஒழுங்குமுறைப் பதிவேட்டில் ஒரு தகுதி இழப்புப் புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது.
போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் விதித்த இந்தத் தண்டனையை ஹர்ஷித் ராணா ஒப்புக்கொண்டதால், மேல் விசாரணை ஏதுமின்றி முடித்து வைக்கப்பட்டது. சர்வதேச போட்டிகளில் கடந்த 24 மாதங்களில் ராணா செய்யும் முதல் குற்றம் இதுவாகும்.
திருந்தாத ராணா?
ஹர்ஷித் ராணா இப்படி விக்கெட் கொண்டாட்டத்தில் வரம்பு மீறுவது இது முதல் முறையல்ல. கடந்த 2024 ஐபிஎல் தொடரில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் மயங்க் அகர்வாலை வீழ்த்திய பிறகு அவருக்கு 'பிளையிங் கிஸ்' கொடுத்து வழியனுப்பினார். அதற்காக அவருக்கு அபராதமும், ஒரு போட்டியில் விளையாடத் தடையும் விதிக்கப்பட்டது.
தற்போது இந்திய அணியில் இடம் பிடித்த பிறகும், அதே பாணியில் ஆக்ரோஷத்தைக் காட்டுவது அவருக்குத் தேவையற்ற நெருக்கடியை ஏற்படுத்தும் என்று விமர்சகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். திறமையான பந்துவீச்சாளராக இருந்தாலும், களத்தில் தனது நடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications