செஞ்சுரியன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பராக கே எல் ராகுல் ஆட உள்ள நிலையில், முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் அந்த முடிவை கடுமையாக எதிர்த்து இருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தான். ஆனால், அவர் தற்போது காயத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில் மற்ற விக்கெட் கீப்பர்களை இந்திய அணி பயன்படுத்தி வந்தது.

கோனா பாரத் உள்ளூர் ரஞ்சி டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட போதும் இந்திய அணியில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இந்த நிலையில், கே எல் ராகுல் தற்காலிகமாக விக்கெட் கீப்பராக செயல்பட இருக்கிறார்.
இரண்டு போட்டிகள் கொண்ட தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர் மட்டுமில்லாமல் அடுத்து நடைபெற உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் கே எல் ராகுல் தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட இருக்கிறார். இந்த நிலையில், பார்த்திவ் படேல் இந்த முடிவுக்கு தன் எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறார்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் ரஞ்சி ட்ராபி கிரிக்கெட் தொடர் அல்லது முதல் தர கிரிக்கெட் தொடர்களில் தொடர்ந்து விக்கெட் கீப்பராக செயல்படுபவராக இருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
கே எல் ராகுல் இந்திய அணியின் கீப்பராக நியமிக்கப்பட்டதையே பார்த்திவ் பெயர் குறிப்பிடாமல் விமர்சனம் செய்து இருக்கிறார். இந்திய அணி எடுத்த தவறான முடிவாக இதை பார்த்திவ் குறிப்பிடும் நிலையில், இந்திய அணி நிர்வாகம், விக்கெட் கீப்பர் ரன்னும் குவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. அந்த இடத்தில் தற்போது அணியில் இடம் பெற்றிருக்கும் மாற்று விக்கெட் கீப்பர் கோனா பாரத் சறுக்குகிறார். அவர் இதுவரை கிடைத்த வாய்ப்புகளில் பெரிதாக ரன் குவித்ததில்லை.
அதனால் தான் கே எல் ராகுல் விக்கெட் கீப்பராக ஆட வைக்கப்படுகிறார். ரிஷப் பண்ட் அணிக்கு திரும்பும் வரை ராகுல் தான் இந்திய அணியின் தற்காலிக விக்கெட் கீப்பர் என்பதில் கேப்டன் ரோஹித் சர்மா உறுதியாக இருக்கிறார். ஆனால், பார்த்திவ் போன்ற சிலர் விக்கெட் கீப்பிங்கில் தவறு செய்தால் அது போட்டியில் வெற்றியை பாதிக்கும் என சுட்டிக் காட்டுகின்றனர்.