கவுஹாத்தி: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், செனுரன் முத்துசாமி விக்கெட்டை வீழ்த்தி விட்டோம் என நம்பிய ரவீந்திர ஜடேஜா, 'டிஆர்எஸ்' (DRS) முடிவால் அதிர்ச்சியில் உறைந்து போனார். கள நடுவர் ராட் டக்கர் உடனடியாக "அவுட்" கொடுத்தும், அந்த முடிவு மாற்றப்பட்ட விதம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. அப்போது 104-வது ஓவரின் இரண்டாவது பந்தை ரவீந்திர ஜடேஜா வீசினார். 92 கி.மீ வேகத்தில் வந்த அந்தப் பந்து, 'பிட்ச்' ஆகித் திரும்பியது. அதை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்க வீரர் செனுரன் முத்துசாமி, 'ஸ்வீப்' ஷாட் ஆட முயன்றார். ஆனால், பந்து அவரது காலை தாக்கியது.

ஜடேஜா உடனடியாக எல்பிடபிள்யூ (LBW) அப்பீல் செய்தார். கள நடுவர் ராட் டக்கரும் சற்றும் தயங்காமல் உடனடியாக விரலை உயர்த்தி "அவுட்" வழங்கினார். இந்திய வீரர்கள் கொண்டாடத் தொடங்கினர். ஆனால், பந்து தனது கை உறையில் பட்டதாக உணர்ந்த முத்துசாமி, உடனடியாக "ரிவ்யூ" கேட்டார்.
மூன்றாவது நடுவர் கிறிஸ் கஃப்பனி ரீப்ளேவை ஆய்வு செய்தார். அப்போது பந்து பேடில் படுவதற்கு முன்னதாக, முத்துசாமியின் கை உறையில் லேசாக உரசியது 'அல்ட்ரா எட்ஜ்' தொழில்நுட்பத்தில் தெளிவாகத் தெரிந்தது. ஆனால், அந்த அதிர்வின் அளவு மிகவும் குறைவாகவே இருந்தது. எனினும், கள நடுவரின் முடிவு மாற்றப்பட்டு, "நாட் அவுட்" என அறிவிக்கப்பட்டது.
திரையில் முடிவைப் பார்த்ததும் ஜடேஜா நம்பமுடியாமல் அதிர்ச்சியில் உறைந்து போனார். மறுபுறம், தனது முடிவு மாற்றப்பட்டதைக் கண்ட கள நடுவர் ராட் டக்கர், எந்த அசைவுமின்றி சில நொடிகள் சிலை போல அப்படியே நின்றார். உறுதியாகக் கிடைக்கும் என நம்பிய விக்கெட் கைநழுவியது இந்திய அணிக்கு ஏமாற்றத்தை அளித்தது.
இந்த டிஆர்எஸ் கண்டத்திற்குப் பிறகு, செனுரன் முத்துசாமி மற்றும் கைல் வெரின் ஜோடி இந்தியப் பந்துவீச்சாளர்களை மேலும் சோதித்தது. தேநீர் இடைவேளை வரை இந்திய அணியால் ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்த முடியவில்லை. பின்னர் வெரின் 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
வேகப்பந்து, சுழற்பந்து என கேப்டன் ரிஷப் பண்ட் எதை முயன்றும் பலனளிக்கவில்லை. முத்துசாமி மிக நிதானமாக விளையாடி 121 பந்துகளில் தனது அரைசதத்தை கடந்தார். பின்னர் தனது முதல் சதத்தை அடித்து அசத்தினார். மார்கோ ஜான்சென் அரைசதம் கடந்தார். முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 400 ரன்களைக் கடந்து வலுவான நிலையில் உள்ளது.