சண்டிகர்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்தத் தோல்விக்கு பந்துவீச்சாளர்களை விட, பேட்டிங் வரிசையில் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்த தேவையற்ற மாற்றமே முக்கிய காரணம் என்று ரசிகர்கள் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.
முதல் போட்டியில் வெற்றிக்கூட்டணியாக இருந்த இந்திய அணி, இந்த போட்டியில் பேட்டிங் ஆர்டரை மாற்றியமைத்து, சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டது.

முல்லன்பூரில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இரவு நேரத்தில் பனிப்பொழிவு (Dew) இருக்கும் என்பதால், இரண்டாவது பந்துவீசுவது கடினம் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 20 ஓவர்களில் 213 ரன்கள் குவித்தனர்.
214 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலேயே துணை கேப்டன் சுப்மன் கில் ஆட்டமிழந்தார். இந்த இக்கட்டான நேரத்தில், சூர்யகுமார் யாதவ் அல்லது திலக் வர்மா களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அக்சர் படேல் டாப் ஆர்டரில் களமிறக்கப்பட்டார்.
மிகப்பெரிய இலக்கை துரத்தும்போது, பவர்-பிளேயில் அதிரடி காட்டக்கூடிய பேட்ஸ்மேன்கள் தேவை. ஆனால் அக்சர் படேல் பந்தை கணிக்கவே திணறினார். 21 பந்துகளைச் சந்தித்த அவர், வெறும் 21 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இந்த மந்தமான ஆட்டம், பின்னால் வந்த பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
முதல் போட்டியின் ஹீரோவாக இருந்த ஹர்திக் பாண்டியா, இந்தப் போட்டியில் தோல்விக்கு ஒரு காரணமாக மாறிப்போனார். 6-வது வரிசையில் களமிறங்கிய அவர், அதிரடியாக ஆட வேண்டிய நேரத்தில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடினார்.
அவர் சந்தித்த 23 பந்துகளில், ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்தார். பவுண்டரிகள் அடிக்க முடியாமல் திணறிய அவர், வெறும் 20 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஓவருக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில், ஹர்திக் பாண்டியாவின் இந்த ஆமை வேக ஆட்டம் அணியை அதல பாதாளத்தில் தள்ளியது.
ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், திலக் வர்மா தனி ஆளாகப் போராடினார். 34 பந்துகளில் 62 ரன்கள் விளாசி நம்பிக்கை அளித்தார். கடைசி நேரத்தில் ஜித்தேஷ் சர்மா 17 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து போராடினாலும், அக்சர் படேல் மற்றும் ஹர்திக் பாண்டியா வீணடித்த பந்துகளால் இந்திய அணியால் வெற்றி இலக்கை நெருங்க முடியவில்லை.
இறுதியில் 19.1 ஓவர்களில் இந்திய அணி 162 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி, 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. "நன்றாக இருக்கும் பேட்டிங் ஆர்டரை ஏன் அடிக்கடி மாற்ற வேண்டும்?" என்று பயிற்சியாளர் கவுதம் கம்பீரை நோக்கி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தத் தோல்வியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் உள்ளது.