செஞ்சூரியன் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இந்திய அணி அடைந்த படுதோல்விக்கான காரணங்கள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் ஒரு வாரத்திற்கு முன்பு தென்னாப்பிரிக்காவுக்கு வந்து நான்கு நாள் பயிற்சி போட்டியில் தங்களுக்குள்ளே இரண்டு அணிகளாக பிரித்து விளையாடினார்கள்.

இதற்கு பதில் இந்திய அணி தென்னாபிரிக்காவில் உள்ளூர் அணியுடன் ஒரு போட்டியில் பங்கேற்று விளையாடி இருந்திருக்க வேண்டும். நமது பவுலர்களை எதிர்கொள்வதை விட தென்னாபிரிக்காவில் உள்ளூர் போட்டியில் விளையாடும் பவுலரை எதிர்கொண்டு இருந்தால் ஓரளவுக்கு அவர்களுடைய வேகப்பந்து வீச்சு எப்படி இருக்கும்.
ஆடுகளம் எவ்வாறு செயல்பட்டு இருக்கும் என்று தெரியும். ஆனால் நமது உள்ளூர் மொக்கை பவுலர்களை அழைத்துச் சென்று இந்திய அணி நான்கு நாள் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்று இருந்திருக்கிறது.2010 ஆம் ஆண்டு இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது அப்போதைய பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டன் இரண்டு மூன்று வாரத்திற்கு முன்பே இந்திய அணி வீரர்களை தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது அவர் அளித்த பேட்டி மிகவும் முக்கியமானவை. தென்னாப்பிரிக்க மண்ணில் நீங்கள் சாதிக்க வேண்டும் என்றால் குறைந்தது ஆயிரம் பந்துகளை பயிற்சியில் நீங்கள் எதிர்கொண்டு இருக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் இந்திய அணி ஒரு வாரத்திற்கு முன்பு சென்று மூன்றே மூன்று பயிற்சி முகாமில் பங்கேற்று நான்கு நாள் கொண்ட ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடி அது இதற்கு பதில் 20 நாட்களுக்கு முன்பே தென்னாப்பிரிக்காவுக்கு சென்று அங்குள்ள அணிகளுக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்று இருக்க வேண்டும்.
சரி இது நடக்கவில்லை நடந்ததில் என்ன தவறு என்று பார்த்தால் அனுபவம் குன்றிய வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டாதால்தான் தோல்வி. கில், ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் டி20 ஒருநாள் என தொடர்ந்து விளையாடுகிறார்கள்.இவர்களை டெஸ்ட் போட்டியில் சேர்ப்பதற்கு பதிலாக ரஞ்சி கிரிக்கெட்டிலே நன்றாக விளையாடிய அபிமன்யு ஈஸ்வரன், சப்ராஸ்கான் போன்ற வீரர்களுக்காவது வாய்ப்பு கொடுத்து இருக்கலாம்.
இப்படி மூன்று பிரிவுகளிலும் ஒரே வீரர்களை வைத்து விளையாடுவதால் என்னதான் பலன் அளிக்கப் போகிறது என்று தெரியவில்லை. இதேபோன்று பந்துவீச்சாளர்கள் சரியான லென்த் மற்றும் லைனில் வீசவே இல்லை. இதனைப் பயன்படுத்திக் கொண்டு தென்னாப்பிரிக்க வீரர்கள் எடுத்த உடனே அதிரடியாக விளையாடி இந்திய வீரர்களை மனதளவில் நிலை குலைய வைத்து விட்டார்கள். போதிய அனுபவம் இல்லாத வீரர்களை ஒரு வாரத்திற்கு முன்பு அழைத்துக்கொண்டு சாதித்து விடலாம் என்று நினைத்தால் அது EA sports cricket 07 கம்பியூட்டர் கேமில் தான் நடக்கும்.