கவுஹாத்தி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் புதிய கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ள விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், தனது கேப்டன்சி அணுகுமுறை குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார். வழக்கமான கிரிக்கெட் யுக்திகளுடன், புதுமையான, துணிச்சலான முடிவுகளையும் கலந்து, ஒரு சமநிலையான கேப்டன்சியை வெளிப்படுத்த விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், முதல் டெஸ்டில் ஏற்பட்ட கழுத்து வலி காரணமாக விலகியதை அடுத்து, ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை கவுஹாத்தியில் தொடங்கும் இந்தப் போட்டி, இந்திய அணிக்கு வாழ்வா - சாவா போட்டி ஆகும். முதல் டெஸ்ட்டில் தோல்வி அடைந்த நிலையில் இந்த தொடரை சமன் செய்ய இந்திய அணிக்கு இந்தப் போட்டியில் வெற்றி அவசியம்.

இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிஷப் பண்ட், தனது கேப்டன்சி குறித்தப் பார்வையைத் தெளிவாக விளக்கினார்.
"ஒரே ஒரு போட்டிக்கு மட்டும் கேப்டனாக இருப்பது ஒரு சிறந்த சூழல் இல்லை என்பது உண்மைதான். ஆனாலும், இந்த வாய்ப்பை பிசிசிஐ எனக்கு வழங்கியதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். உங்கள் நாட்டிற்கு நீங்கள் தலைமை தாங்கவுது என்பது எப்போதுமே ஒரு பெருமையான தருணம்" என்று அவர் கூறினார்.
தொடர்ந்து அவரது கேப்டன்சி ஸ்டைல் குறித்துக் கேட்டபோது, "கிரிக்கெட்டில் மரபுவழி கேப்டன்சியும் நிச்சயமாக உதவும். அதே சமயம், வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான சிந்தனைகளும் வெற்றியைத் தேடித் தரும். என்னைப் பொறுத்தவரை, இந்த இரண்டிற்கும் இடையே ஒரு சரியான சமநிலையைக் கண்டறிவதுதான் என் நோக்கம்" என்று பண்ட் விளக்கம் அளித்தார்.
தனது தலைமையில் வீரர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அவர் பேசினார். "நான் வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கும் ஒரு கேப்டனாக இருக்க விரும்புகிறேன். வீரர்கள் களத்தில் சூழ்நிலைகளைக் கற்றுக்கொண்டு, அணிக்கு எது சரியானதோ அந்த முடிவை அவர்களே எடுப்பதை நான் ஊக்கவிப்பேன். அதுதான் உண்மையான இலக்கு. நிச்சயமாக, களத்தில் எனது அறிவு மற்றும் அனுபவம் அவர்களுக்கு உதவும்" என்றார்.
தனது இயல்பான அதிரடியான மற்றும் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் குணம், கேப்டன்சியில் முடிவுகளை எடுக்கும்போது தடையாக இருக்குமா என்ற கேள்விக்கு, "நான் அதைப் பற்றி பெரிதாகச் சிந்திப்பதில்லை. நான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் எனது 100 சதவீத உழைப்பைக் கொடுத்து, ஆட்டத்தை ரசித்து விளையாட விரும்புகிறேன், அவ்வளவுதான்" என்று பதிலளித்தார்.
வியாழக்கிழமை இரவுதான் தனக்குக் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறிய பண்ட், சுப்மன் கில்லுடன் பேசினீர்களா என்று கேட்டபோது, தனது வழக்கமான நகைச்சுவையுடன், "நான் கில்லுடன் தினமும் பேசுகிறேன்" என்று சிரித்தபடி பதிலளித்தார்.