IND vs SA: 77 பந்துகளில் ருதுராஜ் சதம்..12 பவுண்டரி, 2 சிக்சர்.. ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதம்
மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 77 பந்துகளில் சதம் அடித்திருக்கின்றார். இது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் அடித்துள்ள முதல் சதமாகும். ராய்ப்பூரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 22 ரன்களிலும், ரோகித் சர்மா 14 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். 62 ரன்களுக்கு இந்திய அணி இரண்டு விக்கெட் இழந்த நிலையில், மூன்றாவது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ருதுராஜ் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சை லாவகமாக எதிர்கொண்டனர். ஒரு கட்டத்தில் பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடிய ருதுராஜ் தனது வழக்கமான அதிரடி காட்டினார். பௌண்டரிகளை பறக்க விட்ட, அவர் ஒரு கட்டத்தில் மிக எளிதாக ரன்களை சேர்த்தார்.
மறுமுனையில் விராட் கோலி தன்னுடைய அதிரடியை காட்ட இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய ருதுராஜ், 52 பந்துகளில் தன்னுடைய அரை சதத்தை பூர்த்தி செய்தார். முதல் ஒருநாள் போட்டியில் வாய்ப்பை வீணடித்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் தமக்கு கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.
இந்த வாய்ப்பை விட்டால் இனி நமக்கு வாய்ப்பே வராது என்பதை தெரிந்து கொண்ட ருதுராஜ் களத்தில் நங்கூரமிட்டு அதிரடி காட்டினார். ஒரு கட்டத்தில் கோலியை விட சிறப்பாக விளையாடி ரன்களை சேர்க்க 77 பந்துகளில் தன்னுடைய முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.
இதை அடுத்து எதிர் முனையில் நின்ற விராட் கோலி அவருக்கு கட்டி அணைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
தொடக்க வீரரான ருதுராஜ் நம்பர் நான்காவது இடத்தில் களம் இறக்கப்பட்டாலும் சதம் அடித்து தனது திறமையை நிரூபித்து இருக்கின்றார்.


Click it and Unblock the Notifications