மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு ஈடாக ருதுராஜ் கெய்க்வாட் விளையாடி அசத்தினார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் பாராட்டியுள்ளார். ராய்ப்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் பேட்டிங் வரிசையில் நான்காவது வீரராக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 77 பந்துகளில் தன்னுடைய முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.
அதுமட்டுமில்லாமல் மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 195 ரன்கள் சேர்த்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், விராட் கோலி விளையாடியதற்கு ஈடாக ருதுராஜ் கெய்க்வாடும் விளையாடினார் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட் வேகமாக சிங்கிள் எடுத்து விராட் கோலிக்கு ஏற்ற பேட்ஸ்மேனாக இருந்தார்.

இதை பார்த்தவுடன் ருதுராஜ் கெய்க்வாட் உடன் விளையாடியது விராட் கோலிக்கும் மிகவும் பிடித்து விட்டது. முதல் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தாலும், இரண்டாவது போட்டியில் தமக்கு கிடைத்த வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். எனக்கு தெரிந்து அவர் பேட்டிங் வரிசையில் நம்பர் நான்காவது இடத்தில் களம் இறங்கியதே கிடையாது.
ஆனால் இந்த சிறந்த பேட்டிங்கிற்கு நாம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இடது கை சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் அபாரமாக கவர் ஷாட்ஆடுகின்றார். ஆப் ஸ்பின்னருக்கு எதிராக ஸ்கொயர் கட் செய்கின்றார், ஸ்வீப் ஷார்ட் ஆடுகின்றார். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பேக் புட்டில் அபாரமாக எதிர்கொள்கின்றார்.
மேலும் பந்தை நேராக தூக்கி அடிக்கின்றார். இதையெல்லாம் பார்க்கும் போது அவர் எவ்வளவு திறமை வாய்ந்த பேட்ஸ்மேன் என்பதை காட்டுகின்றது. தமக்கு கிடைத்த வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருப்பதன் மூலம் அவருக்கு இன்னும் நிறைய போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
விராட் கோலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இணைந்து விளையாடி பார்க்கும்போது அவ்வளவு அபாரமாக இருந்தது. இதேபோன்று பேட்டிங்கில் ராகுல் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் ஜடேஜா கொஞ்சம் தடுமாறியதாக நினைக்கின்றேன். அவருடைய பேட்டிங் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது இர்பான் பதான் கூறினார்.