Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"கில்லின் நண்பர் என்பதால்..” சாய் சுதர்சனை கிழித்து தொங்கவிட்ட ரசிகர்கள்.. மீண்டும் ஏமாற்றம்

கவுகாத்தி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இக்கட்டான நிலையில் இருக்கும்போது, மீண்டும் ஒருமுறை சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்துள்ளார் இளம் வீரர் சாய் சுதர்சன். சுப்மன் கில்லுக்குப் பதிலாகக் கிடைத்த வாய்ப்பை அவர் வீணடித்ததால், ட்விட்டரில் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் குவித்த நிலையில், பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

IND vs SA Sai Sudharsan s Poor Performance Questioned his Selection in test team

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாகத் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ரோஹித், விராட் இல்லாத இந்த அணியில், 3-வது இடத்தில் களமிறங்கிய அவர் பொறுப்புடன் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் மீண்டும் ரசிகர்களின் நம்பிக்கையைப் பொய்யாக்கினார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய சாய் சுதர்சன், தென்னாப்பிரிக்கப் பந்துவீச்சாளர் சைமன் ஹார்மர் வீசிய பந்தில் ஒரு புல் ஷாட் ஆட முயன்றார். ஆனால் பந்து சரியாகச் சிக்காமல் ரிகல்டன் கையில் கேட்ச் ஆனது. 40 பந்துகளை எதிர்கொண்ட அவர் வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார்.

ரசிகர்கள் விமர்சனம்

சாய் சுதர்சனின் இந்தத் தொடர் தோல்விகளால் கடுப்பான ரசிகர்கள், ட்விட்டரில் (X தளம்) அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். குறிப்பாகத் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரையும் விட்டுவைக்கவில்லை.

ஒரு ரசிகர் தனது பதிவில், "சாய் சுதர்சன் ஒரு சாதாரண வீரர். அவர் சுப்மன் கில்லின் நண்பர் என்பதாலேயே அவருக்கு இத்தனை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. மற்ற வீரர்கள் ஓரிரு போட்டிகளில் சோபித்தாலே நீக்கப்படுகிறார்கள். ரஞ்சி டிராபி செயல்பாட்டை வைத்து இவரைத் தேர்வு செய்யவில்லை, ஐபிஎல் ஆட்டத்தை வைத்து டெஸ்ட் அணிக்கு எடுத்துள்ளார்கள்" என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு தரப்பு ரசிகர்கள் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். "சாய் சுதர்சன் தொடர்ந்து சொதப்பினாலும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் உள்ளூர் போட்டிகளில் ரன்களைக் குவிக்கும் ருதுராஜ் கெய்க்வாட்டை கம்பீர் கண்டுகொள்வதே இல்லை. ருதுராஜ் சிஎஸ்கே வீரர் என்பதால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

"சாய் சுதர்சனை விடச் சிறந்த ரெக்கார்ட் வைத்திருக்கும் சர்ஃபராஸ் கானை ஏன் அணியில் எடுக்கவில்லை? ஸ்பின்னர்களைச் சிறப்பாக எதிர்கொள்ளும் சர்ஃபராஸ் இருக்கும்போது, தடுமாறும் சாய் சுதர்சனுக்கு ஏன் இத்தனை வாய்ப்புகள்?" என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

படுமோசமான புள்ளிவிவரம்

சாய் சுதர்சன் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 10 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார். அவரது பேட்டிங் சராசரி வெறும் 28 மட்டுமே. இங்கிலாந்து தொடர், வெஸ்ட் இண்டீஸ் தொடர் என எதிலுமே அவர் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. சமீபத்தில் இந்தியா ஏ அணிக்காகத் தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக ஆடியபோதும் 32, 12, 17, 23 என குறைந்த ரன்களையே எடுத்தார்.

இந்திய அணி 122 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், சாய் சுதர்சனின் இந்த விக்கெட் இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இனிவரும் போட்டிகளிலாவது அவருக்குப் பதில் ருதுராஜ் அல்லது சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Story first published: Monday, November 24, 2025, 14:06 [IST]
Other articles published on Nov 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+