IND vs SA: "சஞ்சு சாம்சன் எனக்கு அண்ணன் மாதிரி.. திறமை இருப்பவர்கள்.." மனம் திறந்த ஜித்தேஷ் சர்மா
கட்டாக்: இந்திய டி20 அணியில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு சஞ்சு சாம்சனுக்கும், தனக்கும் இடையே கடும் போட்டி நிலவினாலும், "சஞ்சு சாம்சன் எனக்கு ஒரு மூத்த சகோதரர் மாதிரி" என்று இளம் வீரர் ஜித்தேஷ் சர்மா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சீனியர் வீரரான சஞ்சு சாம்சனை பெஞ்சில் அமர வைத்துவிட்டு, ஜித்தேஷ் சர்மாவுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இது குறித்துப் போட்டிக்குப் பிறகு ஜித்தேஷ் சர்மா மனம் திறந்து பேசினார்.

"அண்ணன் தம்பி பாசம்"
உலகக்கோப்பை நெருங்கும் வேளையில், விக்கெட் கீப்பர் இடத்திற்குத் தான் போட்டி அதிகம். இதுகுறித்துப் பேசிய ஜித்தேஷ், "உண்மையைச் சொல்லப்போனால், சஞ்சு பாய் எனக்கு ஒரு மூத்த சகோதரர் மாதிரி. அவர் அணியில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியே. எங்களுக்குள் இருப்பது ஒரு ஆரோக்கியமான போட்டி தான். திறமை இருப்பவர்கள் வெளியே வருவார்கள். இது அணிக்கும் நல்லது.
சஞ்சு பாய் ஒரு சிறந்த வீரர். அவருடன் போட்டியிடும்போதுதான் நான் எனது முழுத் திறமையையும் வெளிப்படுத்த முடியும். நாங்கள் இருவரும் இந்தியாவுக்காக விளையாடவே முயற்சிக்கிறோம். அவர் தனது அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வார். அது எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது" என்று நெகிழ்ந்துள்ளார்.
சஞ்சுவுக்கு சறுக்கல் ஏன்?
2024-ம் ஆண்டில் சஞ்சு சாம்சன் 3 டி20 சதங்கள் அடித்து மிரட்டினார். ஆனால், சுப்மன் கில் துணை கேப்டனாக இருப்பதால், அவருக்கு ஓப்பனிங் இடம் கிடைப்பதில்லை. மிடில் ஆர்டரில் சஞ்சு தடுமாறுவதாலும், அவர் ஒரு இயற்கையான ஃபினிஷர் கிடையாது என்பதாலுமே, அந்த இடத்திற்குப் பொருத்தமான ஜித்தேஷ் சர்மாவுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
தனது ரோல் குறித்துப் பேசிய ஜித்தேஷ், "ஆட்டத்தை முடித்துக் கொடுப்பது மிகவும் கடினமான வேலை. சொல்லப்போனால் அது ஒரு நன்றி கெட்ட வேலை (Thankless job). ஆனால் நான் அந்த அழுத்தத்தை ரசிக்கிறேன். கடைசி 5 அல்லது 6 ஓவர்களில் களமிறங்குவதில் எனக்கு ஒரு சுவாரசியம் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஐபிஎல் தொடரில் கலக்கிய ஜித்தேஷ், தற்போது இந்திய அணியிலும் தனது இடத்தை உறுதி செய்து வருகிறார். அடுத்த போட்டி சண்டிகரில் உள்ள முல்லன்பூரில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications