கட்டாக்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்படாதது குறித்து ரசிகர்கள் கொந்தளித்து வரும் நிலையில், இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அதற்கான காரணத்தை வெளிப்படையாகப் பேசியுள்ளார். "சுப்மன் கில் எப்போது துணை கேப்டனாக அணிக்குள் வந்தாரோ, அப்போதே சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைப்பது கடினம் என்பது உறுதியாகிவிட்டது" என்று அஸ்வின் கூறியுள்ளார்.
கட்டாக்கில் நடந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலும், சமீபத்தில் 3 சதங்கள் அடித்து ஃபார்மில் இருக்கும் சஞ்சு சாம்சனை உட்கார வைத்துவிட்டு, ஜித்தேஷ் சர்மாவை எடுத்தது விவாதப் பொருளாக மாறியது.

இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், "சஞ்சு சாம்சன் ஏன் அணியில் இல்லை என்று நிறைய விவாதங்கள் நடக்கின்றன. அவர் எப்போதெல்லாம் நீக்கப்படுகிறாரோ, அப்போதெல்லாம் இந்தக் கேள்வி வருவது வழக்கம் தான்.
ஆனால், எப்போது சுப்மன் கில் அணிக்குள் துணை கேப்டனாக நுழைந்தாரோ, அப்போதே சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைப்பது கடினம் என்பது தெளிவாகிவிட்டது. துணை கேப்டனை அணியில் இருந்து நீக்க முடியாது இல்லையா?" என்று சுட்டிக்காட்டினார் அஸ்வின்.
சஞ்சு சாம்சனுக்குப் பதில் ஜித்தேஷ் சர்மா ஏன் தேர்வு செய்யப்பட்டார் என்பதற்கும் அஸ்வின் விளக்கம் அளித்தார். "சஞ்சு சாம்சன் 5-வது இடத்தில் (மிடில் ஆர்டர்) களமிறங்கிப் பெரிதாக ஆடிய அனுபவம் இல்லை. அவர் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். ஆனால் ஜித்தேஷ் சர்மா ஒரு ஃபினிஷர். ஆர்சிபி அணிக்காகக் கடைசி நேரத்தில் வந்து அடித்து ஆடுவதை அவர் வழக்கமாக வைத்துள்ளார். அணியின் தேவைக்கு அந்த இடத்தில் ஜித்தேஷ் தான் பொருந்துகிறார். அதனால்தான் சஞ்சுவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை," என்றார்.
சஞ்சு சாம்சனை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்றும் கம்பீருக்கு அஸ்வின் ஒரு ஆலோசனை அளித்துள்ளார். "நீங்கள் சஞ்சு சாம்சனை ஆட வைக்க விரும்பினால், அவரை 3-வது இடத்தில் களமிறக்குங்கள். ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் அவர் வல்லவர். அவரை 5-வது இடத்தில் இறக்கி வீணடிக்க வேண்டாம்" என்று அஸ்வின் கூறியுள்ளார்.
சுப்மன் கில் துணை கேப்டனாக இருப்பதால், அவரது இடம் பாதுகாப்பாக உள்ளது. ஆனால் துவக்க வீரராக இறங்கும் அவர் தொடர்ந்து சொதப்பினால், சஞ்சு சாம்சனுக்கான ஆதரவுக்குரல் இன்னும் ஓங்கி ஒலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.