IND vs SA: தமிழக வீரர் சேனுரான் முத்துசாமி சதம்.. தென்னாப்பிரிக்க அணியை காப்பாற்றிய நாகை மைந்தன்
கவுஹாத்தி: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை சேர்ந்த தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சேனுரான் முத்துசாமி அபாரமாக சதம் விளாசி அசத்தியுள்ளார். இதன் மூலம் தென்னாபிரிக்க அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்து வருகிறது.
சேனுரான் முத்துசாமியின் பூர்வீகம் நாகப்பட்டினம் ஆகும். ஆனால் அவருடைய தாத்தா காலத்தில் தென்னாப்பிரிக்காவில் டர்பனில் குடியேறி இருக்கின்றனர். இந்த நிலையில் அங்கு பிறந்து வளர்ந்த சேனுரான் முத்துசாமி, தென்னாப்பிரிக்க அணியில் சுழற் பந்துவீச்சாளராக இடம்பிடித்தார்.

ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு இந்திய சுற்றுப்பயணத்தில் சேனுரான் முத்துசாமி டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இந்த நிலையில் கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சேனுரான் முத்துசாமி 89 ரன்கள் அடித்தார். மேலும் பந்துவீச்சில் அந்த தொடரில் மொத்தமாக 11 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி இருந்தார்.
இதனால் தொடர் நாயகன் விருதை சேனுரான் முத்துசாமி பெற்றிருந்தார். தற்போது பேட்டிங் வரிசையில் ஏழாவது வீரராக களம் இறங்கிய சேனுரான் முத்துசாமி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னுடைய முதல் டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்து இருக்கிறார்.
இதன் மூலம் தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கிறது. இது இந்தியாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 350 ரன்களில் சுருண்டு விடும் என எதிர்பார்த்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்தவர் தென்னாப்பிரிக்க அணியை காப்பாற்றி இருக்கிறார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளனர்.
ஆனால் இந்தியாவுக்கு எதிராக இது நடந்திருப்பது கொஞ்சம் துரதிஷ்டவசமானது தான் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். நாகப்பட்டினத்தில் இன்றும் சேனுரான் முத்துசாமியின் குடும்பத்தினர் உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்களை பார்க்க அடிக்கடி சேனுரான் முத்துசாமி நாகப்பட்டினம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications