ஸ்ரேயாஸ் ஐயரின் ஆக்சிஜன் அளவு 50 ஆகக் குறைந்தது.. தென்னாப்பிரிக்க தொடரில் பங்கேற்பது சந்தேகம்
மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது ஏற்பட்ட பயங்கர காயத்திலிருந்து மீண்டு வரும் இந்திய அணியின் ஒருநாள் போட்டி துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், அடுத்த மாதம் துவங்க உள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிட்னியில் காயம் ஏற்பட்டபோது அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தததாகவும், அவரால் நிற்கக் கூட முடியாத நிலை இருந்ததாகவும் அதிர்ச்சித் தகவல்களும் தற்போது வெளிவந்துள்ளன.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி அக்டோபர் 25 அன்று சிட்னியில் நடந்தபோது, அலெக்ஸ் கேரியின் கேட்ச்சை டைவ் அடித்துப் பிடித்தபோது ஸ்ரேயாஸ் ஐயருக்கு வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவர், உடனடியாக மைதானத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், "ஆரம்பத்தில் நினைத்ததை விட ஸ்ரேயாஸின் காயம் மிகவும் தீவிரமானது. காயம்பட்ட சமயத்தில், அவரது உடலில் ஆக்சிஜன் அளவு 50 ஆகக் குறைந்தது. சுமார் பத்து நிமிடங்கள் அவரால் சரியாக நிற்கக் கூட முடியவில்லை. அவரைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாத அளவுக்கு, முழுவதுமாக சுயநினைவை இழந்தது போன்ற நிலைக்குச் சென்றார். இயல்பு நிலைக்குத் திரும்ப அவருக்குச் சிறிது நேரம் பிடித்தது" என்று தெரிவித்தன.
பொதுவாக மனிதர்களுக்கு ஆக்சிஜன் அளவு 90 என்ற அளவுக்கு கீழ் குறைந்தாலே உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆக்சிஜன் அளவு 50 ஆக இருந்தது என்பது மிகப்பெரும் அபாய கட்டம் ஆகும்.
கடந்த வாரம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ஸ்ரேயாஸ், தற்போது மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார். அவர் முழு உடற்தகுதியை மீண்டும் பெற ஒரு மாதத்திற்கும் மேலாகும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து மற்றொரு பிசிசிஐ அதிகாரி கூறுகையில், "இவ்வளவு தீவிரமான காயத்திற்குப் பிறகு, அவரை அவசரப்படுத்தி மீண்டும் அணிக்குக் கொண்டுவர தேர்வுக் குழு விரும்பவில்லை. அவர் முழு உடற்தகுதி பெற கூடுதல் காலம் தேவைப்படும். எனவே, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகமே" என்றார்.
பிசிசிஐ முன்னதாக வெளியிட்ட அறிக்கையில், "ஸ்ரேயாஸ் ஐயரின் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால், அவரது மண்ணீரலில் கிழிசல் ஏற்பட்டு உள் ரத்தக்கசிவு ஏற்பட்டது. உடனடியாக காயம் கண்டறியப்பட்டு, ஒரு சிறிய அறுவை சிகிச்சை மூலம் ரத்தக்கசிவு நிறுத்தப்பட்டது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 14 அன்று தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து, நவம்பர் 30 முதல் ராஞ்சி, ராய்ப்பூர் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.
காயத்திலிருந்து மீண்டு வரும் ஸ்ரேயாஸ் ஐயர், நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில், சூரிய ஒளியில் அமர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, "சூரிய ஒளி ஒரு சிறந்த சிகிச்சையாக உள்ளது. மீண்டும் வந்திருப்பதற்கு நன்றி. உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி" என்று நம்பிக்கையுடன் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications