IND vs SA: சுப்மன் கில் மீண்டும் சொதப்பல்.. இதுக்கு சாம்சனுக்கு வாய்ப்பு தந்திருக்கலாம்.. பொளக்கும் ரசிகர்கள்
கட்டாக்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டனாக களமிறங்கிய சுப்மன் கில், தாம் எதிர்கொண்ட இரண்டாவது பந்திலே ஆட்டம் இழந்து ரசிகர்களை கோபப்படுத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடினார் என்ற காரணத்திற்காக சுப்மன் கில்லுக்கு டி20 அணியிலும் கம்பீர் இடம் வழங்கினார்.
இதற்காக அந்த இடத்தில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த சஞ்சு சாம்சன் அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் கில் மீது கடும் விமர்சனம் எழுந்தது. எனினும் கில், பேட்டிங் மூலம் அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கில் தொடர்ந்து டி20 போட்டிகளில் தடுமாறி வருகிறார்.

தற்போது இரண்டு வார காயத்திற்கு பின்பு இந்திய அணிக்கு கில் திரும்பினார். தாம் எதிர்கொண்ட முதல் பந்திலே கில், பவுண்டரி அடித்தார். இதனால் கில் இன்று நல்ல ஃபார்மில் இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தேவையில்லாமல் ஒரு ஷாட் அடி கேட்ச் ஆகி நான்கு ரன்களில் வெளியேறினார்.
கில் கடைசியாக டி20 சர்வதேச போட்டியில் அரை சதம் அடித்து 16 இன்னிங்ஸ்கள் ஆகிறது. ஜூலை 13ஆம் தேதி 2024 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக கடைசியாக அவர் அரை சதம் அடித்தார். அதன் பிறகு நடைபெற்ற 16 இன்னிங்ஸ்களில் வெறும் நான்கு முறை மட்டும்தான் அவர் 30 ரன்களை கடந்துள்ளார் . கடந்த 16 இன்னிங்ஸ்களில் 20 ரன்களை தாண்டாமல் பத்து முறை ஆட்டம் இழந்து இருக்கிறார்.
இப்படி டி20 கிரிக்கெட்டில் தடுமாறி வருகிறார் என்ற காரணத்தினால் தான் கடந்த 2024 டி20 உலக கோப்பையில் அவருக்கு மெயின் அணியில் இடம் தரப்படவில்லை. தற்போது கில் தேவையில்லாமல் அணிக்குள் கொண்டுவரப்பட்டு நன்றாக விளையாடிக் கொண்டிருந்த சாம்சன் நீக்கப்பட்டு இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரசிகர்கள், கில் நீக்கப்பட்டு அவருக்கு பதில் சஞ்சு சாம்சனை டி20 அணியில் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications