கவுகாத்தி: இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் 2-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் அடையச் செய்து வரலாறு படைத்துள்ள தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர் சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர். இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 17 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய பேட்டிங் வரிசையை உடைத்த அவருக்கு, தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. விருது வென்ற பிறகு அவர் பேசியது, அவரது 10 ஆண்டு கால போராட்டத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.
இந்த தொடரில் சைமன் ஹார்மர் 2 போட்டிகளில், 4 இன்னிங்ஸ்களில் 17 விக்கெட்களை வீழ்த்தினார். மொத்தம் 152 ரன்கள் விட்டுக் கொடுத்து இருந்தார். அதாவது சராசரியாக 8.94 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற விகிதத்தில் அவர் சிறப்பாக பந்து வீசினார்.

சைமன் ஹார்மர் 10 ஆண்டுகளுக்கு முன் 2015இல் இந்தியா வந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருந்தார். அப்போது அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அப்போது தென்னாப்பிரிக்க அணியும் தொடரை இழந்தது. அதனால் ஆவர் அணியில் தனது இடத்தையும் இழந்தார்.
2022இல் மீண்டும் தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார். ஆனாலும், ஹார்மருக்கு நீடித்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது இந்தியா வந்த டெஸ்ட் அணியில் இடம் பிடித்த அவர் தொடர் நாயகன் விருதையும் வென்று இருக்கிறார். 10 வருடம் முன் இந்தியாவால் வாய்ப்பு பறிபோன நிலையில் அதற்கு பழி தீர்த்து இருக்கிறார்.
விருதைப் பெற்ற பிறகு நெகிழ்ச்சியுடன் பேசிய சைமன் ஹார்மர், "கடந்த டெஸ்டில் நான் சொன்னது போல, இது ஒரு நீண்ட பயணம். 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இங்கு வந்துள்ளேன். ஆனால் இந்த முறை முற்றிலும் மாறுபட்ட உணர்வு. கடந்த முறையை விட இந்த முறை பல நல்ல நினைவுகளுடன் இங்கிருந்து செல்கிறேன்" என்று தனது கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "மிகவும் பலம் வாய்ந்த இந்திய அணியை வீழ்த்துவது என்பது ஒரு மிகப்பெரிய முயற்சி. இரண்டாவது இன்னிங்ஸில் 40 ஓவர்களுக்குப் பிறகு பந்து மென்மையாகி பேட்டிங் செய்வது எளிதானது. ஆனாலும், ரிஷப் பண்ட் அவுட் ஆனது போன்ற சில பந்துகள் அபாரமாகத் திரும்பின. தென்னாப்பிரிக்க அணிக்கு உதவியது, விக்கெட்டுகளை வீழ்த்தியது, குறிப்பாக இந்தியாவில் ஒரு 5 விக்கெட் ஹால் எடுத்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.
இந்தியாவின் போராட்டத்தைப் பாராட்டிய அவர், "இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் தங்கள் உயிரைக் கொடுத்துப் போராடுவார்கள் என்று எங்களுக்குத் தெரியும். அவர்கள் கடுமையாகப் போராடினார்கள். ஆனால் சரியான இடங்களில் பந்துவீசினால், விக்கெட்டுகள் விழும் என்று நாங்கள் நம்பினோம். ஸ்லிப்பில் மார்க்ரம் மற்றும் ஜான்சன் பிடித்த அபாரமான கேட்ச்களும் எங்களுக்கு உதவியது" என்றார்.
தனது பந்துவீச்சு உத்தி குறித்துப் பேசியபோது, "நான் ஒரு முனையிலிருந்து வீசும்போது, அது இடது கை பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமான விக்கெட்டாகத் தோன்றியது. அப்போது கேப்டன் பவுமா என்னை மறுமுனைக்கு மாறச் சொன்னார். அது ஒரு சிறந்த முடிவு. விக்கெட்டுகள் கிடைத்தது மகிழ்ச்சி" என்று கேப்டனைப் பாராட்டினார்.
அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ் குறித்துப் பேசியபோது, "கேசவ்வின் 'ரெக்கார்டே' அவருக்காகப் பேசும். அவர்தான் நம்பர் ஒன் ஸ்பின்னர். அவருக்குத் துணையாக ஆடுவதில் எனக்கு மகிழ்ச்சிதான். வாய்ப்பு கிடைக்கும்போது எனது பங்களிப்பைச் செய்வதில் மகிழ்ச்சி" என்று அடக்கமாகக் கூறினார்.
கடைசியாக, "இந்தத் தொடரில் நான் சரியாக பேட்டிங் செய்யவில்லை. பும்ரா என்னை நன்றாகவே சமாளித்துவிட்டார். அடுத்து எசெக்ஸ் அணிக்காக கவுண்டி கிரிக்கெட்டிலும், டைட்டன்ஸ் அணிக்காகவும் சில போட்டிகளில் விளையாடவுள்ளேன்" என்று தனது எதிர்காலத் திட்டம் குறித்துப் பேசி முடித்தார்.
10 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு வந்து சோபிக்கத் தவறிய அதே வீரர், இன்று இந்தியாவை அதன் சொந்த மண்ணிலேயே தனது சுழலால் மிரட்டி, தொடர் நாயகன் விருதை வென்றிருப்பது அவரது கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றியாகப் பாராட்டை பெற்றுள்ளது.