தர்மசாலா: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, தொடரில் 1-2 எனப் பின்தங்கியுள்ள தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம், தோல்விக்கான காரணத்தை விளக்கியுள்ளார். இந்திய பந்துவீச்சாளர்கள் டி20 போட்டியில் டெஸ்ட் போட்டி போல பந்துவீசியதாகவும், அது தங்களுக்குக் கடும் சவாலாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தர்மசாலாவில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் வெறும் 117 ரன்களுக்குச் சுருண்டது. கேப்டன் மார்க்ரம் மட்டும் 61 ரன்கள் எடுத்து தனி ஆளாகப் போராடினார். அதன் பின் 118 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி அதிரடியாக ஆடி 15.5 ஓவர்களில் எல்லாம் இலக்கை எட்டியது. 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

போட்டிக்குப் பிறகு பேசிய மார்க்ரம், "நிச்சயமாக இந்திய பந்துவீச்சாளர்களை பாராட்டியே ஆக வேண்டும். அவர்கள் பந்தை மிகச் சரியான இடங்களில் வீசினார்கள். நாங்கள் சுதாரிப்பதற்குள் 4, 5, 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டோம்.
பின்னர் அவர்கள் ஒரு 'டெஸ்ட் மேட்ச் டெலிவரி', 'டெஸ்ட் மேட்ச் லென்த்' போன்றவற்றை வீசினார்கள். அது மிகவும் சவாலாக இருந்தது. இதுபோன்ற சூழ்நிலையில் ஆடும்போது, அதைச் சமாளிக்க நாங்கள் வழி கண்டுபிடிக்க வேண்டும்" என்று கூறினார்.
குறைந்த ஸ்கோர் குறித்துப் பேசிய அவர், "நாங்கள் 140 அல்லது 150 ரன்கள் எடுத்திருந்தால் ஆட்டம் வேறு மாதிரி இருந்திருக்கும். நான் கடைசி நேரத்தில் சிக்ஸர் அடிக்க நினைத்தேன், ஆனால் அவுட் ஆகிவிட்டேன். அது நடந்திருந்தால் முடிவு மாறியிருக்கலாம். இது சிறிய வித்தியாசங்கள் தான்.
அபிஷேக் சர்மா ஆடிய விதம் சிறப்பு. முதல் 3-4 ஓவர்களில் நாங்கள் சரியான இடத்தில் பந்துவீசத் தவறிவிட்டோம். ஆனால் அதன் பிறகு நன்றாக வீசினோம். விக்கெட்டை எடுக்க முயற்சி செய்தோம். இந்தத் தோல்வியிலிருந்து ஒவ்வொரு வீரரும் பாடம் கற்றுக்கொண்டு, சிறந்த வீரர்களாக மாறுவார்கள். அடுத்த போட்டிக்குத் தயாராவோம்" என்று நம்பிக்கையுடன் கூறினார் மார்க்ரம்.