ஜோகனஸ்பர்க் : 2015 ஆம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்றதில்லை என்ற சோகமான சாதனை இருந்தது. இதனை மாற்ற தென்னாப்பிரிக்க அணி வீரர்களுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டது.
சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவை மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் எதிர்கொள்ள இருந்தது. இதில் முதல் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தொடரை தீர்மானிக்கக்கூடிய கடைசி டி20 போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர். 202 ரன்களை இலக்காக நிர்ணயித்த பிறகும் தென்னாப்பிரிக்க வீரர்கள் அதனை 19 ஓவரில் சேசிங் செய்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் தான் இந்திய வீரர்கள் இருந்தனர்.
ஆனால் முகமது சிராஜ்,முகேஷ் குமார், குல்திப் யாதவ் ஆகியோர் அபாரமாக செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார்கள். 95 ரன்களில் தென்னாப்பிரிக்கா அணி சுருண்டு 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் பிறகு தோல்வி குறித்து பேசிய தென்னாப்பிரிக்கா கேப்டன் ஏய்டன் மார்க்கரம் 200 ரன்களை சேசிங் செய்யப் போகிறோம் என்று நினைத்தபோது நான் ஒன்னும் சோகமாக இல்லை.
ஏனென்றால் இந்த இலக்கை வெற்றிகரமாக துரத்த முடியும் என்றுதான் நான் நினைத்தேன். நிச்சயமாக இது துரத்தக்கூடிய இலக்கு தான். நாங்கள் பில்டிங் செய்யும் போது பேட்டர்கள் அனைத்து திசையிலும் அடிக்கலாம் என்பது போல் தான் இருந்தது. எனினும் இன்றைய ஆட்டத்தில் பேட்டிங்கில் நாங்கள் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
இந்த தொடரில் பல நல்ல விஷயங்கள் எங்கள் அணிக்கு கிடைத்திருக்கிறது. இதனை வைத்து நாங்கள் முன்னோக்கி செல்வோம் என்று நம்புகிறேன். சில நல்ல விஷயங்கள் இருந்தாலும் சில விஷயங்களை நாங்கள் கவனம் செலுத்தி அதனை மாற்ற முயற்சிக்க வேண்டும் என்று தென்னாப்பிரிக்க கேப்டன் ஏய்டன் மார்கரம் கூறியுள்ளார்.