செஞ்சுரியன் : இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள நிலையில் அது குறித்து தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பேசி இருக்கிறார்.
இந்திய அணி இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றதே இல்லை. தென்னாப்பிரிக்காவில் மொத்தம் 23 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளது.
அந்த நான்கு வெற்றிகளும் ஒவ்வொரு தொடரிலும் ஒரு வெற்றி என்ற கணக்கில் தான் வந்தது. அந்த வகையில் தென்னாப்பிரிக்கா, இந்திய அணியை ஆதிக்கம் செலுத்தி ஒவ்வொரு டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.

இந்த நிலையில் இந்த முறை இந்திய அணியில் அனுபவ வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் சரி சமமாக இருப்பதால் இந்திய அணி வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இது பற்றி தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டன் டெம்பா பவுமா சில விஷயங்களை உடைத்துப் பேசி இருக்கிறார்.
டெம்பா பவுமா பேசுகையில், "இந்திய அணி இதுவரை தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்லவில்லை என்பதில் எங்களுக்கு நிறைய பெருமை உள்ளது. தென்னாப்பிரிக்க அணியாக நாங்கள் அந்த ரெக்கார்டை தக்க வைத்து வருகிறோம் என்பதில் எங்களுக்கு பெருமை. அனைத்து வீரர்களும் அதை உணர்கிறோம்." என்றார்.
மேலும், "அதே சமயம், இந்திய அணிக்கு எதிராக ஆடுவதில் சவால்கள் இருப்பதையும் புரிந்து கொண்டு இருக்கிறோம். அதில் கவனம் செலுத்துவோம். இந்திய அணிக்கு எதிராக ஆடும் போது நிறைய பார்வையாளர்கள் இருப்பார்கள். நாம் செய்யும் ஒவ்வொரு விஷயமும் அலசி ஆராயப்படும்" என களத்துக்கு வெளியே தென்னாப்பிரிக்க அணிக்கு இருக்கும் சவாலாக இந்திய ரசிகர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பற்றி கூறினார்.
"அடுத்தது களத்தில் என்ன திறமைகள் வெளிப்படும் என்பதில் நாங்கள் பார்க்கிறோம். ஒரு பேட்ஸ்மேனாக இந்திய பந்துவீச்சாளர்கள் எங்களை கடும் அழுத்தத்தில் வைத்திருப்பார்கள். மேலும், அவர்களின் பேட்டிங் வரிசை, மிகவும் அனுபவம் கொண்ட டெஸ்ட் வீரர்களை கொண்டுள்ளது. அவர்கள் பல்வேறு சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்பட்டவர்கள்." என விராட் கோலி, ரோஹித் சர்மா, கே எல் ராகுல் ஆகியோர் குறித்து கூறினார்.
இறுதியாக இந்திய அணியிடம் கூடுதலாக உள்ள விஷயம் ஒன்றை பற்றி கூறினார். "தென்னாப்பிரிக்காவில் நாங்கள் டெஸ்ட் தொடரை வென்றோம் என கூற வேண்டும் என அவர்கள் அணியாக ஒரு தீர்மானத்துடன் இருக்கிறார்கள். அந்த கூடுதல் உந்து சக்தியுடன் அவர்கள் ஆடுவார்கள் என்பதால் நாங்கள் எங்களின் சிறப்பான ஆட்டத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்" என்றார் டெம்பா பவுமா.