கட்டாக்: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்த ஹர்திக் பாண்டியாவை, தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளர் அஷ்வெல் பிரின்ஸ் வெகுவாகப் பாராட்டியுள்ளார். "அவர் வெறும் சிக்ஸர் அடிக்கும் வீரர் மட்டுமல்ல, அவரிடம் அதைத் தாண்டி ஒரு முதிர்ச்சி இருக்கிறது" என்று அவர் புகழ்ந்துள்ளார்.
கட்டாக்கில் நடந்த போட்டியில் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. ஆனால் போட்டியின் ஒரு கட்டத்தில் இந்திய அணி 14 ஓவர்களில் 104 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மா என டாப் ஆர்டர் சரிந்த நிலையில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். வெறும் 28 பந்துகளைச் சந்தித்த அவர், 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் குவித்து, ஸ்கோரை 175-க்கு உயர்த்தினார். இதுவே தென்னாப்பிரிக்காவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்தப் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அஷ்வெல் பிரின்ஸ், ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் அணுகுமுறை குறித்து வியந்து பேசினார்.
"ஹர்திக் பாண்டியா ஒரு சிக்ஸர் அடிப்பவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதே சமயம் அவர் மிகவும் அமைதியானவர். எந்த பந்தை அடிக்க வேண்டும், எதைத் தடுக்க வேண்டும் என்பதைத் துல்லியமாகக் கணிக்கும் திறன் அவரிடம் உள்ளது."
"இது நீண்ட கால அனுபவத்தால் மட்டுமே வரும். பந்து அவரது எல்லைக்குள் வந்துவிட்டால், அவர் எந்தத் தயக்கமும் இல்லாமல் முழுமையாக பேட்டை சுழற்றுகிறார். அவரிடம் அரைகுறை முயற்சிகளே இல்லை. அடிக்கும்போது அவரிடம் ஒரு தெளிவு இருக்கிறது. அவரது இன்னிங்ஸ் மிகச் சிறப்பாக இருந்தது," என்று அஷ்வெல் பிரின்ஸ் பாராட்டியுள்ளார்.
ஹர்திக் பாண்டியாவின் இந்த அதிரடியால் இந்தியா 176 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா வெறும் 74 ரன்களுக்குச் சுருண்டது. இந்த வெற்றியின் மூலம் பெற்ற உத்வேகத்துடன், இந்திய அணி இரண்டாவது டி20 போட்டியில் விளையாடவுள்ளது. அடுத்த போட்டி நாளை (டிசம்பர் 11) சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.