அகமதாபாத்: 2026 டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. அகமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், இந்திய அணிக்கு இருக்கும் நெருக்கடியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளப் போவதாகத் தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி நடப்பு சாம்பியனாகவும், தொடரை நடத்தும் நாடாகவும் இருப்பதால் அவர்கள் மீது எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு இருக்கும். லீக் சுற்றில் விளையாடிய நான்கு போட்டிகளிலும் எளிதாக வெற்றி பெற்று இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆனால், சூப்பர் 8 சுற்று அவர்களுக்குச் சவாலாகவே அமையும். இந்திய அணியின் பிரிவில் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய மூன்று அணிகளுமே லீக் சுற்றில் நான்கு வெற்றிகளுடன் வந்துள்ளதால் இங்கிருந்து ஒவ்வொரு போட்டியும் கடுமையாக இருக்கும்.

இது குறித்துப் பேசிய தென்னாப்பிரிக்கப் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட், "இந்திய அணி போன்ற ஒரு பலமான அணியின் செயல்பாடுகளை அனைவரும் கூர்ந்து கவனிப்பார்கள். எப்படியாவது அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்ற மிகப்பெரிய நெருக்கடி அவர்களுக்கு நிச்சயமாக இருக்கும். அந்த அழுத்தத்தின் காரணமாக அவர்கள் செய்யும் தவறுகளை நாங்கள் வெளிக்கொண்டு வந்து, அதை எங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வோம் என்று நம்புகிறேன்" எனக் கூறினார்.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் முழுவதுமாக இந்திய ரசிகர்களின் ஆதரவு இருக்கும் என்பது தென்னாப்பிரிக்க அணிக்கு ஒரு சவாலாக இருக்கும் என்பதை கான்ராட் ஒப்புக்கொண்டார். அதே சமயம், இந்திய அணிக்கு உள்ளேயும் வீரர்களுக்கு மத்தியில் சில நெருக்கடிகள் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் பேசுகையில், "அழுத்தம் என்பது இரு அணிகளுக்கும் பொதுவான ஒரு விஷயம்தான். உலகின் சிறந்த அணிக்கு எதிராக விளையாடும்போது ஏற்படும் நெருக்கடி குறித்து நாம் அனைவரும் பேசுகிறோம். ஆனால் அந்த அணி எந்த மாதிரியான நெருக்கடிகளில் இருக்கிறது என்பதை நாம் கவனிப்பதில்லை. கடந்த மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து டக் அவுட் ஆன ஒரு வீரர், அணியில் தனது இடத்தைத் தக்கவைக்க எந்த நெருக்கடியையும் சந்திக்க மாட்டார் என்று நான் கூற மாட்டேன்" என்று இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவை மறைமுகமாகக் குறிப்பிட்டு அவர் விமர்சித்தார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய அனுபவம் தங்களுக்குப் பெரிதும் உதவும் எனத் தென்னாப்பிரிக்கப் பயிற்சியாளர் நம்புகிறார். அந்தச் சுற்றுப்பயணத்தில் தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.
"கடந்த ஆண்டு இந்தியப் பயணம் எந்த மாதிரியான சவால்களை நாங்கள் எதிர்கொள்ளப் போகிறோம் என்பதற்கான ஒரு தெளிவான பார்வையைக் கொடுத்தது. ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் மைதானத்தில் சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரசிகர்கள் நீல நிற ஜெர்சியுடன் இந்திய அணிக்கு ஆதரவளிப்பார்கள். அந்தச் சவாலான சூழலை எதிர்கொள்ள நாங்கள் முழுமையாகத் தயாராகவே இருக்கிறோம். சூப்பர் 8 சுற்றில் அரையிறுதிக்குச் செல்ல நாங்கள் வெற்றி பெற வேண்டிய சில போட்டிகளில் இதுவும் ஒன்று" என்று கான்ராட் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
தோல்வியே சந்திக்காத இரு அணிகள் மோதும் இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மோதிய இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மீண்டும் 2026 டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.