கவுகாத்தி: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு கடும் அழுத்தம் கொடுத்துள்ள நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் பேசிய ஒரு வார்த்தை, தற்போது கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வீரர்களை "grovel (குரோவல் - மண்டியிட்டு நகர்ந்து செல்லுதல்)" செய்ய விரும்பினோம் என்று அவர் கூறியது, இனவெறித் தாக்குதலாகப் பார்க்கப்படுவதால், ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். அந்த வார்த்தைக்கு மிகப் பெரிய சர்ச்சை வரலாறு உள்ளது.
கவுகாத்தி டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுக்ரி கான்ராட், "இந்திய வீரர்களை முடிந்தவரை களத்திலேயே வைத்திருக்க விரும்பினோம். அவர்கள் கால்களில் நிற்கவே சிரமப்பட வேண்டும்; அவர்களை மண்டியிடச் (Grovel) செய்ய விரும்பினோம்; ஆட்டத்திலிருந்து அவர்களை முழுவதுமாக வெளியேற்றி, கடைசி நாளில் போராடிப் பாருங்கள் என்று சொல்ல நினைத்தோம்" என்று கூறினார். அவர் பயன்படுத்திய 'grovel' என்ற வார்த்தைதான் தற்போது சர்ச்சையின் மையப்புள்ளியாக உள்ளது.

'Grovel' என்ற வார்த்தைக்குப் பல அர்த்தங்கள் இருந்தாலும், அதன் பொதுவான பொருள், 'தாழ்ந்து போவது', 'காலில் விழுவது', 'அடிபணிவது', 'மண்டியிடுவது' போன்றவையாகும். மெரியம்-வெப்ஸ்டர் ஆங்கில அகராதியின்படி, 'அடிபணிதல் அல்லது தாழ்வு மனப்பான்மையின் அடையாளமாக உடலைக் கீழே வைத்துப் படுத்துக் கிடப்பது அல்லது தவழ்வது' என்று பொருள். இது இனவெறியுடன் தொடர்புடைய வார்த்தையாகவும் அறியப்படுகிறது. ஒரு முறை கிரிக்கெட்டிலும் இந்த வார்த்தையால் சர்ச்சை எழுந்துள்ளது.
1976-ம் ஆண்டு, கிளைவ் லாயிட் தலைமையிலான பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தது. அப்போது இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்தவர் டோனி கிரேக் (Tony Greig). இவர் ஒரு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வெள்ளை இனத்தவர்.
அந்த தொடர் தொடங்குவதற்கு முன் பிபிசிக்கு பேட்டியளித்த டோனி கிரேக், "வெஸ்ட் இண்டீஸ் அணி அவ்வளவு சிறந்த அணி என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் ஆதிக்கம் செலுத்தும்போது சிறப்பாக ஆடுவார்கள். ஆனால் அவர்கள் தாழ்ந்து போகும்போது, மண்டியிடுவார்கள் (grovel). அவர்களை மண்டியிடச் செய்வதே எனது நோக்கம்" என்று ஆணவத்துடன் கூறினார்.
வெள்ளை இனத்தைச் சேர்ந்த ஒருவர், கறுப்பின வீரர்களைப் பார்த்து 'grovel' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது, வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் ரத்தத்தைக் கொதிக்க வைத்தது. "'Grovel' என்ற வார்த்தை எந்தவொரு கறுப்பின மனிதனின் ரத்த அழுத்தத்தையும் உயர்த்தும்" என்று கிளைவ் லாயிட் பின்னர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த அவமானத்தை ஒரு மிகப்பெரிய உத்வேகமாக எடுத்துக்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, அந்த டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்தது. டோனி கிரேக் கேப்டன் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
சுக்ரி கான்ராட்டுக்கு இந்த வரலாறு தெரியாதா? என்றால், நிச்சயமாகத் தெரியும். ஏனென்றால், அந்த வார்த்தையைப் பயன்படுத்திய உடனேயே, ஒரு வரியைக் கடன் வாங்கிக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார். இதன் மூலம், டோனி கிரேக் பயன்படுத்தியதைத்தான் தானும் குறிப்பிடுவதாக அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுக்ரி கான்ராட் இந்திய வீரர்களை அவமானப்படுத்தும் நோக்கில் பேசினாரா அல்லது எதேச்சையாகப் பேசினாரா என்பது விவாதமாகியுள்ளது. ஆனால், கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சர்ச்சைக்குரிய மற்றும் இனவெறித் தாக்குதலாகப் பார்க்கப்பட்ட ஒரு வார்த்தையை, அவர் மீண்டும் பயன்படுத்தியிருப்பது கண்டனத்திற்குரியது என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
சுக்ரி கான்ராட் தென்னாப்பிரிக்காவில் "பிரவுன்" நிற இனமாக பார்க்கப்படுகிறார். அதாவது அவர் வெள்ளையர் இல்லை என்ற ஒரே காரணம் மட்டுமே அவர் யதேச்சையாக இதை கூறி இருக்கலாம் என்ற வாதத்திற்கு ஆதரவாக உள்ளது.
தென்னாப்பிரிக்க அணி களத்தில் சிறப்பாக விளையாடி ரசிகர்களின் மனதைக் கவர்ந்தாலும், பயிற்சியாளரின் இந்த ஒரு வார்த்தை, அந்த அணிக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அவர் வருத்தம் தெரிவிப்பாரா?