கவுகாத்தி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 489 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை குவித்துள்ள நிலையில், இந்திய அணிக்கு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஒரு அதிரடியான யோசனையை வழங்கியுள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் ஏற்கனவே இந்தியா 0-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இந்நிலையில், கவுகாத்தியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இந்தியா உள்ளது.

இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவில் தென்னாப்பிரிக்க அணி முழு ஆதிக்கத்தைச் செலுத்தியது. அந்த அணியின் செனுரன் முத்துசாமி தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். மறுபுறம் மார்கோ யான்சன் 91 பந்துகளில் 93 ரன்கள் விளாசி இந்தியப் பந்துவீச்சாளர்களைச் சோதித்தார். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 489 ரன்களைக் குவித்தது.
தற்போது இந்திய அணி 489 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் பேட்டிங்கைத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், வர்ணனையாளராக இருக்கும் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு ஒரு முக்கியமான யோசனையைக் கூறியுள்ளார். அதாவது, "இந்தியா பாரம்பரியமான டிபென்சிவ் ஆட்டத்தைக் கைவிட்டு, அதிரடியாக ஆட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசிய ரவி சாஸ்திரி, "வியூக ரீதியாக இந்தியா நாளை ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டும். புதிய பந்தை சமாளித்த பிறகு, ஆட்டத்தை வேகமாக நகர்த்த வேண்டும். வெற்றியை நோக்கிச் செல்ல வேண்டுமென்றால், சில நேரங்களில் நீங்கள் தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் எதிரணியின் ஸ்கோரை விடப் பின்தங்கியிருக்கும் போதே 'டிக்ளேர் செய்யவும் தயங்கக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் விளக்குகையில், "நீங்கள் தென்னாப்பிரிக்காவின் 489 ரன்களைக் கடக்கும் வரை காத்திருக்க முடியாது. அது அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால், 80, 90 அல்லது 100 ரன்கள் குறைவாக இருக்கும் போதே டிக்ளேர் செய்துவிட்டு, இரண்டாவது இன்னிங்ஸில் அவர்களை விரைவில் 'ஆல்-அவுட்' செய்ய முயற்சிக்க வேண்டும். இது ஒரு மிகப்பெரிய சூதாட்டம் தான். ஆனால் வெற்றி பெற வேண்டுமென்றால் இத்தகைய வாய்ப்புகளை பயன்படுத்தித்தான் ஆக வேண்டும்" என்று ரவி சாஸ்திரி அதிரடியாகக் கூறியுள்ளார்.
ஏற்கனவே, கம்பீர் பல அதிரடியான முடிவுகளை எடுத்து டெஸ்ட் அணியை சீர்குலைத்து விட்டார் என விமர்சனம் எழுந்து வரும் நிலையில், ரவி சாஸ்திரி மேலும் உசுப்பேற்றி விடும் வகையில் இது போன்ற ஆலோசனையை அளித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், இரண்டாவது இன்னிங்ஸில் பின்தங்கிய நிலையில் 'டிக்ளேர்' செய்வது இதுவரை 33 முறை நடந்துள்ளது. ஆனால், அதில் வெறும் 3 முறை மட்டுமே அந்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன. இந்திய அணியைப் பொறுத்தவரை, இதுவரை 4 முறை இப்படிப் பின்தங்கிய நிலையில் 'டிக்ளேர்' செய்துள்ளது. ஆனால் ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை.
1948-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 103 ரன்கள் பின்தங்கிய நிலையில் 'டிக்ளேர்' செய்த இந்தியா தோல்வியைத் தழுவியது. மற்ற மூன்று முறையும், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக போட்டிகள் டிராவில் முடிந்தன.
தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்திய அணி, ரவி சாஸ்திரியின் இந்தத் அதிரடி யோசனையை ஏற்குமா? கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரிஷப் பண்ட் என்ன செய்யப்போகிறார்கள் என்று பார்க்கலாம். .