ஜோஹன்னஸ்பெர்க் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சில் அதிரடியாக செயல்பட்டு 116 ரன்களுக்கு தென்னாப்பிரிக்க அணியை ஆல் - அவுட் செய்தது.
தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியின் குல்தீப் யாதவுக்கு பயந்து போட்ட திட்டம் அந்த அணிக்கே எதிராக மாறியது. கடைசியாக வந்த குல்தீப் யாதவ் 1 விக்கெட் மட்டும் வீழ்த்தினார். அவர் பவுலிங் வீச வருவதற்குள் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட்களை இழந்தது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி ஜோஹன்னஸ்பெர்க் மைதானத்தில் நடைபெற்றது. அதே மைதானத்தில் தான் சில நாட்கள் முன்பு மூன்றாவது டி20 போட்டியும் நடைபெற்று இருந்தது. அந்தப் போட்டியில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அந்த பிட்ச் ஸ்பின் பந்துவீச்சுக்கு ஒத்துழைத்தது.
அந்தப் போட்டி நடந்த அதே பிட்ச்சில் தான் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதை அடுத்து தென்னாப்பிரிக்கா அணி ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் பந்து வீசும் முன் முதல் 15 ஓவர்களிலேயே அதிக ரன்களை சேர்த்து விட வேண்டும் என திட்டமிட்டது.
அதனால், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஓவர்களில் ரன் குவிக்க முயற்சி செய்தனர். முகேஷ் குமார் ஓவர்களில் ஓரளவு ரன் சேர்த்த தென்னாப்பிரிக்க வீரர்களால் அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஓவர்களில் ரன் குவிக்க முடியவில்லை. அத்துடன் சிறப்பாக பந்து வீசிய அர்ஷ்தீப், ஆவேஷ் ஓவர்களில் அடித்த ஆட முற்பட்டு தங்கள் விக்கெட்களை வரிசையாக இழந்தனர்.
அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட், ஆவேஷ் கான் 4 விக்கெட்கள் வீழ்த்த தென்னாப்பிரிக்க அணி 101 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்தது. அதன் பின் கடைசி ஒரு விக்கெட்டை குல்தீப் யாதவ் வீழ்த்தினார். தென்னாப்பிரிக்கா எடுத்த தவறான முடிவால் மோசமாக ஆடி 116 ரன்களுக்கு ஆல் -அவுட் ஆனது.