கவுகாத்தி: இந்திய கிரிக்கெட் அணி தனது சொந்த மண்ணில் இதுவரை சந்திக்காத ஒரு மோசமான சாதனையைப் படைக்கும் விளிம்பில் நிற்கிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வியை நோக்கிச் செல்வதால், வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு அணி இந்தியாவை இரண்டு முறை சொந்த மண்ணில் 'ஒயிட்வாஷ்' செய்யும் சூழல் உருவாகியுள்ளது.
கவுகாத்தியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் அணி மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 201 ரன்களுக்குச் சுருண்டது.

குல்தீப் யாதவ் இந்த பிட்ச் ஒரு 'ரோடு' (பேட்டிங்கிற்குச் சாதகமானது) என்று கூறியிருந்த நிலையில், இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையாகப் பெவிலியன் திரும்பினர். வெறும் 201 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதற்கு முக்கிய காரணம் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன்.
6 அடி 8 அங்குலம் உயரம் கொண்ட மார்கோ ஜான்சன், பிட்ச்சில் எக்ஸ்ட்ரா பவுன்ஸை உருவாக்கி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஏற்கனவே பேட்டிங்கில் 93 ரன்கள் விளாசிய அவர், பந்துவீச்சிலும் இந்தியாவைச் சிதறடித்தார்.
இந்திய அணி ஒரு கட்டத்தில் 1 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. ஆனால், அங்கிருந்து 122 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் என மளமளவெனச் சரிந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் (58) மற்றும் கே.எல். ராகுல் (22) நல்ல பந்துகளில் ஆட்டமிழந்தாலும், சாய் சுதர்சன், துருவ் ஜூரல் மற்றும் கேப்டன் ரிஷப் பண்ட் ஆகியோர் ஆடிய ஷாட்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின. வாஷிங்டன் சுந்தர் (48) மற்றும் குல்தீப் யாதவ் (19) சிறிது நேரம் போராடியதால் இந்தியா 200 ரன்களையாவது கடந்தது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், சொந்த மண்ணில் இதுவரை இரண்டு முறை மட்டுமே முழுத் தொடரையும் இழந்து இருக்கிறது. 1999-2000இல் ஹான்சி குரோனியே தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.
சமீபத்தில் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணி, இந்தியாவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. தற்போது தென்னாப்பிரிக்கா இந்த டெஸ்டில் வெற்றி பெற்றால், இந்திய மண்ணில் இரண்டு முறை ஒயிட்வாஷ் செய்த முதல் அணி என்ற வரலாற்றை தென்னாப்பிரிக்கா படைக்கும்.
தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு இது மிகப்பெரிய சோதனைக்காலம். இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே சொந்த மண்ணில் நடந்த மூன்று 'ஒயிட்வாஷ்' தோல்விகளில், இரண்டு தோல்விகள் கம்பீரின் பயிற்சியின் கீழ் நடக்கப் போகிறது என்பது கசப்பான உண்மையாக இருக்கும். நியூசிலாந்து தொடர் தோல்வியே இன்னும் ஆறாத நிலையில், தென்னாப்பிரிக்காவிடமும் 0-2 எனத் தோற்றால் அது கம்பீரின் பதவிக்கே ஆபத்தாக முடியலாம்.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா 26 ரன்கள் எடுத்து விக்கெட் இழப்பின்றி உள்ளது. ஏற்கனவே 314 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள அந்த அணி, இந்திய அணிக்கு 450 ரன்களுக்கும் அதிகமான இலக்கை நிர்ணயிக்கத் திட்டமிட்டுள்ளது. ஒரு அதிசயம் நடந்தால் ஒழிய, இந்திய அணி இந்த அவமானகரமான தோல்வியிலிருந்து தப்பிப்பது கடினம் என்றே தெரிகிறது.