மும்பை: இந்திய அணியை "மண்டியிடச் (Grovel) செய்ய விரும்பினோம்" என்று ஆணவமாகப் பேசிய தென்னாப்பிரிக்க தலைமைப் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட்டுக்கு, இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தக்க பதிலடி கொடுத்துள்ளார். "இந்திய கிரிக்கெட் வாரியமும், இந்திய உரிமையாளர்களும் இல்லை என்றால் தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்" என்று அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கவுகாத்தி டெஸ்ட் போட்டியின் போது, இந்தியாவை அவமானப்படுத்தும் நோக்கில் கான்ராட் பயன்படுத்திய 'Grovel' என்ற வார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து ஜியோ ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் பேசிய கவாஸ்கர், தென்னாப்பிரிக்காவுக்கு வரலாற்றையும், தற்போதைய நிதர்சனத்தையும் பாடம் எடுத்துள்ளார்.

சுக்ரி கான்ராட்டின் பேச்சு முதிர்ச்சியற்றது என்று கூறிய கவாஸ்கர், "அந்த வார்த்தையை அவர் பயன்படுத்தியது முற்றிலும் தவறான செயல். தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்டின் வரலாற்றை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். இனவெறி காரணமாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக உலக கிரிக்கெட்டில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த தென்னாப்பிரிக்காவை, மீண்டும் உள்ளே கொண்டு வர முன்மொழிந்ததே இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தான்.
அவர்கள் தடையிலிருந்து மீண்டு வந்து விளையாடிய முதல் சர்வதேச போட்டியே இந்தியாவுக்கு எதிராகத்தான் நடந்தது. அப்படிப்பட்ட உறவு நமக்கு உள்ளது," என்று வரலாற்றை நினைவுபடுத்தினார்.
தொடர்ந்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டின் தற்போதைய பொருளாதார சூழலைச் சுட்டிக்காட்டி கவாஸ்கர் பேசினார். "இன்று தென்னாப்பிரிக்காவில் நடக்கும் டி20 லீக்கை (SA20) எடுத்துக்கொள்ளுங்கள். அதில் உள்ள 6 அணிகளில், 5 அணிகளின் உரிமையாளர்கள் இந்தியர்கள் தான். இந்த இந்திய உரிமையாளர்கள் தான் தென்னாப்பிரிக்க வீரர்களுக்குப் பெரிய அளவில் ஆதரவளித்து வருகின்றனர்."
"சர்வதேச நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல், உள்ளூர் வீரர்களுக்கும் இந்தியப் பணம் தான் வாழ்வாதாரம் கொடுக்கிறது. அப்படி இருக்கும்போது, இந்தியாவை மட்டம் தட்டிப் பேசுவது தவறான நேரத்தில், தவறான இடத்தில் பேசப்பட்ட வார்த்தை" என்று கவாஸ்கர் சுளீர் என பதிலளித்தார்.
கான்ராட் மன்னிப்பு கேட்க வேண்டுமா? என்ற கேள்விக்கு கவாஸ்கர் பக்குவமாகப் பதிலளித்தார். "நான் அவரிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லவில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு மன்னிப்பில் நம்பிக்கை இல்லை. ஆனால், அடுத்த முறை அவர் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் போது, இது குறித்து அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
'ஆவேசத்தில் அப்படி பேசிவிட்டேன், கொஞ்சம் வரம்பு மீறிவிட்டேன்' என்று அவர் ஒப்புக்கொண்டாலே போதும். அதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 30 ஆண்டுகால உறவில் போட்டி இருக்குமே தவிர, பகைமை இருக்காது. எனவே, அவர் தனது தவறை ஒப்புக்கொண்டு விளக்கம் அளிக்க வேண்டும்" என்று கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய அணியின் தயவால் வளர்ந்துவிட்டு, இந்தியாவையே அவமானப்படுத்தும் வகையில் பேசிய பயிற்சியாளருக்கு கவாஸ்கர் கொடுத்த இந்த 'நோஸ்-கட்' பதில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.