கொல்கத்தா : இந்திய அணியில் உலகக்கோப்பை முடியும் வரை நிரந்தர இடத்தை பிடித்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.
முன்பு மாற்று வீரராக இந்திய அணியில் இடம் பெற்ற சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகிய நிலையில் அணியில் இடம் பெற்று மூன்று போட்டிகளில் ஆடி இருக்கிறார்.

ஆனால், தற்போது ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை தொடரில் இருந்தே நீக்கப்பட்டு இருக்கிறார். அதனால், சூர்யகுமார் யாதவுக்கு அணியில் நிரந்தர இடம் கிடைத்துள்ளது.
சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டிகளில் இதுவரை நிரந்தர வீரராக இடம் பெற்றதில்லை. மாற்று வீரராக ஒரு கிரிக்கெட் தொடரின் சில போட்டிகளில் ஆடி இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் போன்ற பலம் குறைந்த அணிகளுக்கு எதிராக முக்கிய வீரர்கள் ஓய்வு எடுக்கும் போது சூர்யகுமார் யாதவ் அணியில் இடம் பெறுவார்.
ஆனால், அப்போது கூட தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயம் அவருக்கு இருக்கும். எந்த பயமும் இன்றி, அணியில் தன் இடம் குறித்த சிந்தனை இன்றி அவரால் போட்டிகளில் பங்கேற்கும் நிலை இதுவரை அவருக்கு கிடைக்கவில்லை. அதனாலேயே அவரால் ஒருநாள் போட்டிகளில் இதுவரை தன் இயல்பான அதிரடி ஆட்டத்தை ஆட முடியவில்லை.
உலகக்கோப்பை தொடரில் அணியில் இடம் பெற்ற மூன்று போட்டிகளில் ஒரு முறை பொறுப்பாக ஆடி 49 ரன்கள் அடித்து இருந்தார். ஆனால், சூழ்நிலை கருதி நிதான ஆட்டம் ஆடியே அந்த ரன்களை அவர் எடுத்தார்.
தற்போது பாண்டியா இல்லாத நிலையில், மீதமுள்ள இரண்டு உலகக்கோப்பை லீக் போட்டிகள் மற்றும் அரை இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவுக்கு அணியில் வாய்ப்பு உறுதி. இந்த நிலையில், அவர் எந்த பயமும் இன்றி தன் இயல்பான ஆட்டத்தை ஆட முடியும்.
இந்தியா அடுத்ததாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க உள்ளது. கொல்கத்தாவில் நடைபெறும் அந்தப் போட்டியின் பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. அதனால், உலகக்கோப்பை தொடரில் அணியில் நிரந்தர இடம் கிடைத்துள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக தன் இயல்பான அதிரடி ஆட்டத்தை ஆட அதிக வாய்ப்பு உள்ளது. அதை மட்டும் அவர் செய்தால் தென்னாப்பிரிக்கா அணிக்கு பெரிய சிக்கல் ஏற்படும்.