தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவர் பிளே ஓவர்களை வீசுவதற்கு 5 பவுலர்களையும் பயன்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டது.

இதன்பின் இந்திய அணியின் பேட்டிங் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்கா அணிக்கு டிஎல்எஸ் முறைப்படி 15 ஓவர்களில் 152 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக ஆடிய ரிங்கு சிங் 39 பந்துகளில் 68 ரன்களையும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 56 ரன்களையும் விளாசினர். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் இளம் வீரர் கோட்சியே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்பின் 152 ரன்கள் இலக்குடன் ஹென்ரிக்ஸ் - ப்ரீட்ஸ்கே கூட்டணி களமிறங்கியது. இந்திய அணி தரப்பில் முதல் ஓவரை சிராஜ் வீசினார். அந்த ஓவரில் மட்டும் 14 ரன்கள் விளாசப்பட்டது. இதன்பின் இரண்டாவது ஓவரை வீச அர்ஷ்தீப் சிங் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் மட்டும் 20 ரன்கள் விளாசப்பட்டது. தொடர்ந்து உடனடியாக ஸ்பின்னரான ஜடேஜாவை அட்டாக்கில் கொண்டு வந்தார் சூர்யகுமார் யாதவ். அந்த ஓவரில் வெறும் 5 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து ப்ரீட்ஸ்கே ரன் அவுட்டாக முக்கிய பங்காற்றினார் ஜடேஜா.
அதன்பின் 4வது ஓவரை வீசுவதற்கு வேகப்பந்துவீச்சாளரான முகேஷ் குமார் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் தென்னாப்பிரிக்கா அணி 13 ரன்களை சேர்த்த நிலையில், பவர் பிளேயின் கடைசி ஓவரை வீச குல்தீப் யாதவ் கொண்டு வரப்பட்டார். அந்த ஓவரில் மட்டும் தென்னாப்பிரிக்கா அணி 11 ரன்களை சேர்த்து அசத்தியது. இதன் மூலமாக தென்னாப்பிரிக்கா அணி 5 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 67 ரன்களை சேர்த்தது.
இதன் மூலமாக பவர் பிளேயின் 5 ஓவர்களை வீச சூர்யகுமார் யாதவ் 5 பவுலர்களை பயன்படுத்தியுள்ளது தெரிய வருகிறது. 3வது ஓவரை சிறப்பாக வீசிய ஜடேஜாவை மீண்டும் அட்டாக் செய்யாமல், 5வது ஓவரில் என்ன காரணத்திற்காக குல்தீப் யாதவ் கொண்டு வரப்பட்டார் என்பது சூர்யகுமார் யாதவிற்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இதன் மூலம் இந்திய அணியின் பலத்தை பவர் பிளேவிலேயே சூர்யகுமார் யாதவ் எதிரணிக்கு வெளிச்சம் போட்டு காட்டியதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.