IND vs SA Final - 3 வீரர்களுக்கு இது தான் கடைசி சர்வதேச டி20 போட்டி.. மகுடத்துடன் விடை பெறுவார்களா?
பார்படாஸ் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு பலப் பரீட்சை நடத்துகின்றன. இந்த நிலையில் இந்தப் போட்டி மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கு கடைசி சர்வதேச டி20 போட்டி ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்கள் யார் சாம்பியன் பட்டத்துடன் விடை பெறுவார்களா என்பதை தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா. ரோகித்துக்கு தற்போது 37 வயது ஆகின்றது. அடுத்த டி20 உலக கோப்பை 2026 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது.

அப்போது ரோகித்துக்கு 39 வயதாகிவிடும். இதனால் அந்த தொடரில் ரோஹித் சர்மா விளையாடுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இளம் வீரர்களுக்கு தான் அந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படும். ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை அரையிறுதியில் ரோகித் சர்மா தோல்வி அடைந்த நிலையில் அவர் அதன் பிறகு நடைபெற்ற டி20 போட்டிகளில் சேர்க்கப்படவில்லை.
இளம் வீரர்களுக்கு வழி விடும் விதமாக ரோகித் சர்மா இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் விலகி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. கோலிக்கு தற்போது 35 வயதாகிறது. அடுத்த டி20 உலக கோப்பை நடைபெறும் போது கோலிக்கு 37 வயதாகிவிடும். கோலி தற்போது டி20 சர்வதேச கிரிக்கெட்டில் தடுமாறி வருகிறார். நடப்பு தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 75 ரன்கள் தான் அடித்திருக்கிறார்.

இதன் மூலம் விராட் கோலிக்கு நடப்பு தொடர் தான் கடைசி சர்வேச t20 போட்டியாக இருக்கலாம். கோலியும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் கவனம் செலுத்தலாம். ரோகித் சர்மா ஏற்கனவே டி20 சாம்பியன் பட்டத்தை 2007 ஆம் ஆண்டு வென்று இருக்கிறார். ஆனால் கோலி 2011 உலக கோப்பையை தான் வென்றிருக்காரே தவிர t20 கோப்பையை இன்னும் கைப்பற்ற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் தென்னாப்பிரிக்கா வீரர் குயிண்டன் டி காக் . டி காக் தற்போது 31 வயது தான் ஆகிறது என்றாலும் அவர் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் ஒப்பந்தத்தில் குயிண்டன் டி காக் தனது பெயரை கொடுக்கவில்லை. இளம் வயதிலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்காக விளையாடி வரும் டி காக், தற்போது உலகம் முழுவதும் நடைபெறும் டி 20 தொடர்களின் கலந்து கொள்வதற்கு ஆயத்தமாகி வருகிறார். இதனால் தென் ஆப்பிரிக்க அணியில் இவர் விளையாடும் கடைசி போட்டியாக இது இருக்கலாம்.


Click it and Unblock the Notifications