22 வயது தமிழக வீரருக்கு இந்திய அணியில் வாய்ப்பு.. தென்னாப்பிரிக்கா தொடரில் ஆடப் போகும் சாய் சுதர்ஷன்
சென்னை : தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் சாய் சுதர்ஷன் இடம் பெற்றுள்ளார்.
22 வயதே ஆகும் நிலையில் சாய் சுதர்ஷன் இந்திய அணியில் வாய்ப்பை பெற்றுள்ளார். அவர் இந்த ஒருநாள் தொடரில் ஆடினால் அதுவே அவரது சர்வதேச அறிமுகமாகவும் இருக்கும்.
சாய் சுதர்ஷன் கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக ஆடியதன் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. 2022 ஐபிஎல் தொடரில் ஐந்து போட்டிகளில் 145 ரன்கள் குவித்தார்.

அடுத்து 2023 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக 8 போட்டிகளில் ஆடி 362 ரன்கள் குவித்தார். அதன் சராசரி மட்டும் 51.71 ஆகும். குறிப்பாக இறுதிப் போட்டியில் மூன்றாம் வரிசையில் இறங்கி 47 பந்துகளில் 96 ரன்கள் குவித்தார். அப்போதே சாய் சுதர்ஷனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டது.
2023 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்துள்ள நிலையில், சாய் சுதர்ஷனுக்கு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் துவக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட்டுடன் இணைந்து களமிறங்குவார் என கூறப்படுகிறது. அத்துடன் இந்தியா ஏ அணியிலும் சாய் சுதர்ஷன் இடம் பெற்றுள்ளார்.
அடுத்து டி20 உலகக்கோப்பை வர உள்ள நிலையில் அந்த அணியில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என சில ரசிகர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர். ஆனால், சாய் சுதர்ஷனுக்கு இதுவே முதல் இந்திய அணி அழைப்பு என்பதால் அவர் சர்வதேச போட்டியில் என்ன செய்வார் என்பதை பார்க்கவே அவருக்கு இந்த முதற்கட்ட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2024 டி20 உலகக்கோப்பை முடிந்த உடன் தான் சாய் சுதர்ஷனுக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்குமா? என்பது தெரிய வரும்.


Click it and Unblock the Notifications