விசாகப்பட்டினம்: தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி முதல் முறையாக முதலில் பேட்டிங் செய்தது.
தென்னாபிரிக்க அணி வெறும் 270 ரன்கள் நிர்ணயித்த நிலையில் அதனை இந்தியா 39.5 ஓவரில் எல்லாம் எட்டியது. இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் பவுமா, இந்த போட்டியை நாங்கள் இன்னும் சுவாரஸ்யமாக மாற்ற நினைத்தோம்.

ஆனால் அதற்கான ரன்களை நாங்கள் எடுக்கவில்லை. இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது இரவு நேரத்தில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறிவிடுகிறது. நாங்கள் இன்னும் புத்தியை சிறப்பாக பயன்படுத்தி விக்கெட்டுகளை முதலில் தக்க வைத்துக் கொண்டு பெரிய ஸ்கோர் அடித்திருக்க வேண்டும்.
நாங்கள் முதல் 10 ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்தினோம். ஆனால் இந்தப் போட்டியில் பெரிய இலக்கை நாங்கள் நிர்ணயிக்கவில்லை. இதனால் எந்த நெருக்கடியும் இந்திய அணிக்கு ஏற்படவில்லை. இந்திய வீரர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். சிறப்பாகவும் பேட்டிங் செய்தார்கள். தங்களுடைய திறமையை இன்று அவர்கள் காட்டினார்கள்.
இன்று சுழற் பந்துவீச்சாளருக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை காண்பிக்க வேண்டும் என எங்கள் வீரர்கள் நினைத்தார்கள். ஆனால் இன்று ஆடுகளம் முதல் இரண்டு போட்டிகளை விட வித்தியாசமாக இருந்தது. 50 ஓவர் போட்டிகளில் முழு பந்துகளையும் எதிர்கொள்ளாமல் ஆல் அவுட் ஆகக்கூடாது. எங்கள் அணியில் இரண்டு வீரர்கள் நல்ல தொடக்கத்தை அளித்தார்கள்.
குயிண்டன் டி காக் சதம் அடித்தார். அதன் பிறகு நாங்கள் எங்களுடைய இன்னிங்ஸ் பயணத்தை இழந்து விட்டோம். இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமாக விளையாடி இருக்க வேண்டும். இருப்பினும் இந்த அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். எங்கள் அணியில் பல சீனியர்களும் இளம் வீரர்களும் எங்கள் அணியில் இருக்கின்றார்கள்.
ஒவ்வொரு போட்டியிலும் எப்படி விளையாட வேண்டும் என்று நாங்கள் ஆலோசித்தோம். அதேபோல நடந்து கொண்டோம். இங்கிருந்து நாங்கள் வளர தான் செய்வோம். பத்து விஷயங்கள் இருக்கிறது என்றால் நாங்கள் அதில் ஆறு ஏழு விஷயங்களை சரியாக செய்து விட்டோம் என்று கேப்டன் பவுமா கூறியுள்ளார்.