IND vs SA: தென்னாப்பிரிக்க வரலாற்றை மாற்றிய கேப்டன் பவுமா.. அதிவேகமாக 2000 ரன்களை எட்டி சாதனை
விசாகப்பட்டினம்: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமாவுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றாலும், அவர் ஒரு அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அரைசதத்தை நூலிழையில் தவறவிட்டாலும், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல் ஒன்றை அவர் எட்டியுள்ளார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் டெம்பா பவுமா 48 ரன்கள் எடுத்திருந்தபோது, ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அரைசதத்தை 2 ரன்களில் தவறவிட்டாலும், அவர் ஒருநாள் போட்டிகளில் 2,000 ரன்களை கடந்தார். இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் 2,000 ரன்களைக் கடந்த மிகவும் வயதான தென்னாப்பிரிக்க வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

டெம்பா பவுமாவுக்கு தற்போதைய வயது 35 மற்றும் 203 நாட்கள் ஆகும். ராசி வான் டெர் டுசென் 34 வயது மற்றும் 247 நாட்கள் இருந்த போது 2000 ரன்களை எட்டியதே முந்தைய சாதனையாக இருந்தது. அதை பவுமா முறியடித்து இருக்கிறார்.
வயது மட்டும் காரணமல்ல, அவர் இந்த ரன்களை வேகமாகவும் சேர்த்துள்ளார். 53 இன்னிங்ஸ்களில் 2,000 ரன்களை எட்டியதன் மூலம், அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டிய தென்னாப்பிரிக்க வீரர்கள் பட்டியலில் டி காக் உடன் இணைந்து 4-வது இடத்தைப் பகிர்ந்துள்ளார்.
- ஹாசிம் அம்லா (40 இன்னிங்ஸ்)
- ராசி வான் டெர் டுசென் (45 இன்னிங்ஸ்)
- கேரி கிர்ஸ்டன் (50 இன்னிங்ஸ்)
- குயின்டன் டி காக் / டெம்பா பவுமா (53 இன்னிங்ஸ்)
இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 270 ரன்கள் மட்டுமே எடுத்தது. குவிண்டன் டி காக் 89 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்து டெம்பா பவுமா அதிகபட்சமாக 48 ரன்கள் சேர்த்தார். 300 ரன்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட தென்னாப்பிரிக்க அணி 270 ரன்களுக்குள் சுருண்டது.
இந்திய அணியில் குல்தீப் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா அபாரமாக பந்து வீசி தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.


Click it and Unblock the Notifications