IND vs SA: 9 ஆண்டுகளில் முதல் சதம்.. எங்களுக்குனே வருவீங்களாடா.. இந்திய பவுலர்களை பொளந்த டீன் எல்கர்
சென்சுரியன்: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா தொடக்க வீரர் டீன் எல்கர் அபார சதம் விளாசி அசத்தியுள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்சுரியனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. சிறப்பாக ஆடிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் 4 சிக்ஸ், 14 பவுண்டரி உட்பட 101 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தார்.

இதன்பின் தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் டீன் எல்கர் - எய்டன் மார்க்ரம் கூட்டணி களமிறங்கியது. இதில் இந்திய அணியின் சிராஜ் வேகத்தில் மார்க்ரம் 5 ரன்கள் எடுத்து கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் இளம் வீரர் டோனி டி சோர்சியுடன் அனுபவ வீரர் டீன் எல்கர் இணைந்து தென்னாப்பிரிக்கா அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர்.
டீன் எல்கருக்கு கடைசி டெஸ்ட் தொடர் என்பதால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதற்கேற்ப எல்ரும் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு காட்டு காட்டு என்று காட்டினார். ஒவ்வொரு ஓவரிலும் அசால்ட்டாக பவுண்டரிகளை விளாசிய அவர், 79 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். எப்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டிராவிஸ் ஹெட் இந்திய அணியை தவிக்கவிட்டாரோ, அப்படியே இன்றைய ஆட்டத்தில் எல்கர் ஆடினார்.
இந்திய அணியின் 5 பவுலர்கள் முயன்றும் எல்கரை வீழ்த்த முடியவில்லை. அரைசதம் விளாசிய பின் எல்கரின் ஆட்டம் கொஞ்சம் அதிரடிக்கு திரும்பியது. இதனால் இந்திய பவுலர்களுக்கு ரன்களை கட்டுப்படுத்துவதா அல்லது விக்கெட்டுக்கு செல்வதா என்று குழம்பினர். இதனை பயன்படுத்தி கண்மூடி திறப்பதற்குள் எல்கர் சதத்தை விளாசி அசத்தினார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் டீன் எல்கர் அடிக்கும் 14வது சதம் இதுவாகும். 2014ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணிக்கு எதிரான சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா வீரர் அடிக்கும் முதல் சதம் இது. அதேபோல் தென்னாப்பிரிக்காவில் உள்ள 7 மைதானங்களில் சதம் விளாசிய 2வது தென்னாப்பிரிக்கா வீரர் என்ற சாதனையையும் பெற்றுள்ளார். இதற்கு முன் கிப்ஸ் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 27, 2023, 20:33 [IST]
Other articles published on Dec 27, 2023


Click it and Unblock the Notifications