For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கம்பீர் பேச்சை கேட்டு ரஹானே ஆவேசம்.. ஒழுங்கா பயிற்சி கொடுக்காமல் பேட்ஸ்மேன்களை குறை சொல்லக் கூடாது

மும்பை: கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு, பேட்ஸ்மேன்களின் திறமையின்மையே காரணம் என தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இந்திய அணியின் மூத்த வீரர் அஜிங்க்யா ரஹானே அதற்கு கடுமையான மறுப்பு தெரிவித்துள்ளார். சுழலுக்குச் சாதகமான ஆடுகளங்களில் விளையாட முறையான பயிற்சி அளிக்காமல் வீரர்களை குறை கூறுவது நியாயமற்றது என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி இரண்டரை நாட்களுக்குள் முடிவுக்கு வந்தது. இந்தப் போட்டியில் எந்த அணியும் ஒருமுறை கூட 200 ரன்களைத் தாண்டவில்லை. நான்காவது இன்னிங்ஸில் 124 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்ட முடியாமல் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

IND vs SA Test Ajinkya Rahane Slams Gambhir s Criticism Lashes Out at Team India Management

முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு பேசிய கௌதம் கம்பீர், "ஆடுகளம் எப்படி இருந்தாலும், 124 ரன்களைச் சேஸ் செய்யத் தவறியதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று பேட்ஸ்மேன்களைச் சாடியிருந்தார். இந்நிலையில், சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் நிகழ்ச்சியில் பேசிய அஜிங்க்யா ரஹானே, கம்பீரின் கருத்துக்கு முற்றிலும் எதிரான ஒரு பார்வையை முன்வைத்துள்ளார்.

ரஹானே தனது பேட்டியில், "டெஸ்ட் போட்டிகளில் மட்டும் முதல் நாளிலிருந்தே சுழலும் ஆடுகளங்களை நாம் உருவாக்குகிறோம். ஆனால், நமது வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடும் ஆடுகளங்கள் பெரும்பாலும் தட்டையாகவோ அல்லது வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாகவோ இருக்கின்றன. கடுமையாக சுழலும் ஆடுகளங்கள் மிகக் குறைவு" என்று சுட்டிக்காட்டினார்.

"டெஸ்ட் போட்டிகளில் திடீரென இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாடச் சொன்னால் வீரர்கள் எப்படிச் சிறப்பாகச் செயல்படுவார்கள்? அவர்களைக் குறை சொல்வதில் எந்த நியாயமும் இல்லை. வீரர்கள் இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாடிப் பழக்கமில்லை. பயிற்சி ஆட்டங்களில் கூட இப்படிப்பட்ட ஆடுகளங்களில் அவர்கள் பயிற்சி செய்வதில்லை" என்று அணி நிர்வாகத்தின் தயாரிப்பு முறைகளைக் கடுமையாக விமர்சித்தார் ரஹானே.

ரஹானே மேலும் கூறுகையில், "வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களில் நாம் ஏன் சிறப்பாகச் செயல்படுகிறோம்? ஏனென்றால், அதற்காக நாம் சிறப்பாகத் தயாராகிறோம். ஆனால், உள்நாட்டுத் தொடர்களுக்கு, குறிப்பாகச் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களுக்கு, நமது தயாரிப்பு போதுமானதாக இல்லை" என்றார்.

"இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற அணிகள் இந்தியாவிற்கு வரும்போது எப்படித் தயாராகின்றன என்று பாருங்கள். இங்கிலாந்து துபாயில் பயிற்சி முகாம் நடத்துகிறது. நியூசிலாந்து இந்தியாவிலேயே முகாமிட்டுப் பயிற்சி செய்கிறது. ஆனால், நாம் ஒரு டெஸ்ட் போட்டிக்கு மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்புதான் ஒன்றாக இணைகிறோம். அப்படியிருக்கும்போது பேட்ஸ்மேன்கள் மட்டும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படிச் சரி?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ரஹானே குறிப்பிட்டது போல, தென்னாப்பிரிக்க அணி இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு, பாகிஸ்தானில் சுழலுக்குச் சாதகமான ஆடுகளங்களில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடித் தங்களைத் தயார்படுத்திக் கொண்டது. ஆனால், இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை முடித்துவிட்டு நேரடியாகக் கொல்கத்தா டெஸ்டில் களமிறங்கினர். கேப்டன் சுப்மன் கில் உட்படப் பல வீரர்கள் போட்டிக்குச் சில நாட்களுக்கு முன்புதான் அணியில் இணைந்தனர். சொந்த மண்ணில் தொடரை இழக்கும் அபாயத்தில் உள்ள இந்திய அணி, ரஹானேவின் ஆலோசனைகளைக் கருத்தில் கொள்ளுமா?

Story first published: Friday, November 21, 2025, 16:05 [IST]
Other articles published on Nov 21, 2025
English summary
IND vs SA Test: Ajinkya Rahane Slams Gambhir's Criticism, Lashes Out at Team India Management
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+