கொல்கத்தா: இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய திருப்பமாக துருவ் ஜுரல் விக்கெட் கீப்பர் என்பதை தாண்டி பேட்ஸ்மேனாக மட்டும் அணியில் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஒன்றரை மாதங்களாக ரன் மழை பொழிந்து வரும் இளம் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் துருவ் ஜூரல், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட்டுடன் சேர்ந்து பிளேயிங் லெவனில் இடம்பெற உள்ளார்.
மேலும், துருவ் ஜூரலின் இந்த அசுர ஃபார்ம் காரணமாக, ஆல்-ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி தனது இடத்தை இழக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.

கணுக்கால் முறிவு காரணமாக இந்திய டெஸ்ட் அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஓய்வில் இருந்தபோது, இந்தியா ஆடிய கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் (ஓவல், அகமதாபாத், டெல்லி) துருவ் ஜூரல்தான் விக்கெட் கீப்பிங் செய்தார். தற்போது பண்ட் அணிக்குத் திரும்பியுள்ளதால், பிளேயிங் லெவனைத் தேர்வு செய்வது அணி நிர்வாகத்திற்குப் பெரிய தலைவலியாக மாறியுள்ளது.
ஆனால், இந்த உள்ளூர் சீசன் தொடங்கியதிலிருந்து ஜூரலின் ஸ்கோர்கள், அவரை அணியிலிருந்து நீக்க முடியாத நிலைக்குத் தள்ளியுள்ளன. அவரது கடைசி எட்டு ஃபர்ஸ்ட்-கிளாஸ் இன்னிங்ஸ் ஸ்கோர்கள்: 140, 1 & 56, 125, 44 & 6, 132 & 127*. இதில் மூன்று சதங்கள் (ஒரு சர்வதேச டெஸ்ட் சதம் உட்பட), ஒரு அரைசதம் என ரன் மழை பொழிந்துள்ளதால், அவரது ஃபார்மைப் புறக்கணிக்கவே முடியாத சூழல் உருவாகியுள்ளது.
பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஜூரலை ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாகக் களமிறக்கவே அதிக வாய்ப்புள்ளது. அவரை இரண்டு இடங்களில் பொருத்திப் பார்க்க முடியும். ஒன்று, 3-ம் நிலையில் ஆடும் சாய் சுதர்சனின் இடம். ஆனால், அவர் தனது கடைசி டெஸ்ட்டில் அரைசதம் அடித்துள்ளதால், அந்த இடத்தில் அணி நிர்வாகம் மாற்றத்தை விரும்பவில்லை."
"மற்றொரு இடம் நிதீஷ் குமார் ரெட்டியுடையது. இந்திய ஆடுகளங்களில் அவரது பந்துவீச்சு பெரிய அளவில் தேவைப்படாது என்பதாலும், ஜூரலின் பேட்டிங் ஃபார்முடன் ஒப்பிடுகையில், ரெட்டியை ஜூரலுக்கு முன்னுரிமை கொடுத்து ஆட வைக்க முடியாது" என்றார்.
அகமதாபாத் டெஸ்ட்டில் நிதீஷ் ரெட்டி வெறும் 4 ஓவர்கள் மட்டுமே வீசியதால், டெல்லி டெஸ்ட்டில் தேவ்தத் படிக்கல்லைச் சேர்க்கலாமா என்ற தீவிர விவாதம்கூட நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், 8-ம் வரிசை வரை பேட்டிங் பலம் (டெப்த்) இருக்க வேண்டும் என்று விரும்புபவர்.
அந்த வகையில், மிடில் ஆர்டரில் ஜூரலுக்கு நீண்ட வாய்ப்புகளை அவர் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கத் தயாராகி வருவதால், நிதீஷ்குமார் ரெட்டியின் பந்துவீச்சுக்கான தேவை மேலும் குறைந்து இருக்கிறது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், இரண்டு ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பர்கள் ஒரே பிளேயிங் லெவனில் இடம்பெறுவது மிகவும் அரிதானது. இதற்கு முன், தோனியுடன் தினேஷ் கார்த்திக், பார்த்திவ் படேல் அல்லது பண்ட் போன்றோர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இணைந்து ஆடியிருந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் இது போன்ற நிகழ்வுகள் மிக மிகக் குறைவு.
துருவ் ஜூரலின் கடின உழைப்பும், ரன் வேட்டையும் அணி நிர்வாகத்தை இந்த முடிவை எடுக்க வைத்துள்ளது. கொல்கத்தா டெஸ்ட்டில் இந்த புதிய வியூகம் எந்த அளவிற்கு வெற்றி பெறும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.