கவுஹாத்தி: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கவுஹாத்தியில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலத்தையே தீர்மானிக்கப் போகும் ஒரு முக்கியமான போட்டியாக மாறி உள்ளது.
சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-1 எனப் பின்தங்கியிருக்கிறது இந்திய அணி. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் வென்றால் இந்திய அணியால் தொடரை 1 - 1 என சமன் செய்ய முடியும். ஒருவேளை இந்திய அணி தோல்வி அடைந்தால் நியூசிலாந்து தொடருக்கு பிறகு மண்ணில் கிடைத்த இரண்டாவது டெஸ்ட் தொடர் தோல்வியாக இது மாறும். இது அணியை வழிநடத்தும் தலைமைப் பயிற்சியாளர் கம்பீரின் பதவியை பறிக்க முக்கிய காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைமைப் பயிற்சியாளராக கம்பீரின் சமீபத்திய செயல்பாடுகள் நம்பிக்கையளிக்கும் விதமாக இல்லை. ஒரு காலத்தில் சொந்த மண்ணில் தோற்கடிக்க முடியாத அணியாக வலம் வந்த இந்தியா, சமீபகாலமாகத் தடுமாறி வருகிறது.
கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு, இந்தியா தனது சொந்த மண்ணில் விளையாடிய கடைசி ஆறு டெஸ்ட் போட்டிகளில் நான்கில் தோல்வியடைந்துள்ளது. இதில் நியூசிலாந்துக்கு எதிரான தொடர் முழுவதையும் இழந்ததும் அடங்கும்.
தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில், முதல் போட்டியில் தோற்று 0-1 எனப் பின்தங்கியுள்ளது. இந்நிலையில், கவுஹாத்தியில் நடைபெறும் இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால், அது ரசிகர்களால் மட்டுமல்ல, பிசிசிஐ நிர்வாகத்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக அமையும்.
இந்திய அணியின் இந்தத் தொடர் சறுக்கல்களுக்குப் பின்னால் பயிற்சியாளர் கம்பீரின் அணுகுமுறையே காரணம் எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, அவரது "பிடிவாதமான போக்கு" கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஒரு திட்டம் களத்தில் தோல்வியடையும்போதும், மாற்றுத் திட்டங்களை யோசிக்காமல், தனது முடிவிலேயே அவர் உறுதியாக நிற்பது கேள்விகளை எழுப்பியுள்ளது.
அவரது அணித் தேர்வு, பேட்டிங் வரிசை மற்றும் பீல்டிங் வியூகங்கள் போன்றவை குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. டி20, டெஸ்ட் போட்டி சூழலுக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்யாமல், தான் நினைத்ததைச் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற முனைப்பிலேயே அவர் செயல்படுவதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். உதாரணத்திற்கு, டெஸ்ட் போட்டியிலும் டி20 போல நான்கு ஆல்-ரவுண்டர்களை ஆட வைக்க வேண்டும் என அவர் பிடிவாதமாக இருப்பதை கூறலாம்.
மேலும், பத்திரிகையாளர் சந்திப்புகளில் அவரது மூர்க்கமான பதில்களும் விவாதப் பொருளாகியுள்ளன. அவரது நேர்மை ரசிக்கத்தக்கதாக இருந்தாலும், தோல்விகளுக்கான பொறுப்பை ஏற்க மறுப்பது போன்ற தோற்றத்தை இது உருவாக்குகிறது. ஒரு தலைமைப் பயிற்சியாளருக்கு இது ஆபத்தான அடையாளம் ஆகும்.
இங்கு கவனிக்க வேண்டிய சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், கம்பீரின் செயல்பாடுகள் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் முற்றிலும் மாறுபட்டுள்ளன.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கம்பீர் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். அவரது பயிற்சியின் கீழ் இந்தியா சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசியக் கோப்பை போன்ற முக்கியத் தொடர்களை வென்றுள்ளது. இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளும் மிகவும் நம்பிக்கையுடன் காணப்படுகிறது. எனவே, தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து அவர் முழுமையாக நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
மாறாக, டெஸ்ட் கிரிக்கெட் பயிற்சியாளர் என்ற பொறுப்பு மட்டுமே தற்போது ஆபத்தில் உள்ளது. இந்தச் சூழலில்தான் கவுஹாத்தி டெஸ்ட் முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய அணி கவுஹாத்தியில் தென்னாப்பிரிக்காவிடம் தொடரை இழந்தால், பிசிசிஐ கடுமையான முடிவுகளை எடுக்கக்கூடும். கம்பீர் முழு சுதந்திரம் மற்றும் அதிகாரத்துடன் செயல்பட்ட போதிலும், சொந்த மண்ணில் தொடர் தோல்விகளை சந்தித்தார் என்பதை வைத்து டெஸ்ட் பயிற்சியாளர் பதவியை நீக்க வாய்ப்பு உள்ளது.