Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“நீங்கள் தவறு செய்து விட்டு இந்திய பேட்ஸ்மேன்கள் மீது பழி போடுவதா?” கம்பீரை வெளுத்த ஸ்ரீகாந்த்

சென்னை: கொல்கத்தாவில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, ஈடன் கார்டன் ஆடுகளம் குறித்த சர்ச்சை வெடித்தது. "நாங்கள் கேட்டது போன்ற ஆடுகளம்தான் இது" என்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியது, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், கம்பீரின் இந்தக் கருத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், 1983 உலகக் கோப்பை நாயகனுமான கிரிஸ் ஸ்ரீகாந்த் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், "இந்த ஆடுகளத்தில் பேய்கள் ஒன்றும் இல்லை, சிறந்த டெக்னிக்கை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்று கம்பீர் கூறுவதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இப்படிப்பட்ட ஒரு ஆடுகளத்தில் எப்படி விளையாட முடியும்? பல பேட்ஸ்மேன்கள் தற்காப்புடன் விளையாட முயன்று, ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தோ அல்லது எல்.பி.டபிள்யூ. முறையிலோ ஆட்டமிழந்தனர்" என்று கேள்வி எழுப்பினார்.

IND vs SA Test Kris Srikkanth Slams Gambhir Over Controversial Kolkata Pitch

மேலும், "எதற்காகத் தொடர்ந்து இதுபோன்ற மோசமான ஆடுகளங்களை உருவாக்கிவிட்டு, பிறகு வீரர்களின் பேட்டிங் டெக்னிக்கை குறை கூற வேண்டும்? அது முற்றிலும் தவறு. நீங்கள் யாராக இருந்தாலும் சரி, இந்த ஆடுகளத்தில் நிலைத்து நிற்பது என்பது இயலாத காரியம். டெம்பா பவுமா ஒருவர் மட்டும் சிறப்பாக ஆடினார், ஆனால் ஒட்டுமொத்த வீரர்களில் அவர் ஒரு விதிவிலக்கு மட்டுமே" என்று ஸ்ரீகாந்த் ஆவேசமாகத் தெரிவித்தார்.

கம்பீரின் பயிற்சியின் கீழ், இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடிய கடைசி 6 டெஸ்ட் போட்டிகளில் 4-ல் தோல்வியைத் தழுவியுள்ளது என்ற புள்ளிவிவரத்தையும் ஸ்ரீகாந்த் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

"சொந்த மண்ணில் இது ஒரு மிக மோசமான சாதனை. நாம் முழு பலத்துடன் கூடிய அணியுடன் தான் விளையாடுகிறோம். 'இது நாங்கள் கேட்ட பிட்ச்' என்று கம்பீர் சொல்கிறார். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு இது தகுதியான ஆடுகளமே அல்ல. முதல் நாளில் இருந்தே பந்து தாறுமாறாகத் திரும்புகிறது. பல ஆண்டுகளாக இதே தவறை மீண்டும் மீண்டும் செய்து வருகிறோம், ஆனால் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மறுக்கிறோம். இந்த ஆடுகளத்தில் எல்லாமே தவறு" என்று அவர் குறிப்பிட்டார்.

ஆடுகளத்தின் தன்மையை விமர்சித்த ஸ்ரீகாந்த், தனது பாணியில், "இந்த ஆடுகளத்தில் நான் ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் லைனில் பந்து வீசினால் கூட ஒரு விக்கெட்டை எடுத்துவிடுவேன்" என்று கிண்டலாகக் கூறினார். வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் இந்த ஆடுகளம் உதவியதால், ஆடுகளத்தைக் கேள்வி கேட்கக்கூடாது என்று கம்பீர் கூறியிருந்தார். ஆனால், கம்பீரின் இந்த வாதத்தை "அபத்தமான பேச்சு" என்று ஸ்ரீகாந்த் முற்றிலுமாக நிராகரித்தார்.

"அவர் அபத்தமான விஷயங்களைப் பேசுகிறார். இரு அணிகளுமே பேட்டிங் செய்யத் திணறின. எல்லோருமே போராடிக் கொண்டிருந்தார்கள். கம்பீர் அழுத்தத்தில் இருக்கிறாரா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால், இந்தத் தோல்வியால் இந்திய அணி இப்போது மிகப்பெரிய அழுத்தத்தில் இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்" என்று ஸ்ரீகாந்த் கூறி முடித்தார்.

நவம்பர் 22-ஆம் தேதி கவுகாத்தியில் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, தொடரைச் சமன் செய்யும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. இந்தச் சூழலில், ஸ்ரீகாந்த்தின் இந்தக் கடுமையான விமர்சனங்கள், அணி நிர்வாகத்தின் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Story first published: Monday, November 17, 2025, 19:16 [IST]
Other articles published on Nov 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+