IND vs SA: ஏற்கனவே தோல்வி கடுப்பு.. இதுல இது வேறயா? நடு ராத்திரியில் ஏர் இந்தியாவை விளாசிய சிராஜ்
கவுகாத்தி: தென்னாப்பிரிக்காவிடம் படுதோல்வி அடைந்த சோகத்தில் ஊருக்குத் திரும்பிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு, விமான நிலையத்தில் மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. விமானம் தாமதமானதால் கடுப்பான அவர், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தை சமூக வலைதளத்தில் வறுத்தெடுத்துள்ளார்.
கவுகாத்தி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. போட்டி முடிந்த கையோடு, வீரர்கள் தங்கள் ஊர்களுக்குப் புறப்பட்டனர்.

முகமது சிராஜ் கவுகாத்தியிலிருந்து ஹைதராபாத் செல்வதற்காக விமான நிலையம் சென்றார். கவுகாத்தியிலிருந்து ஹைதராபாத் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (IX 2884) நேற்று (புதன்கிழமை) இரவு 7:25 மணிக்குக் கிளம்ப வேண்டியது. ஆனால், அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தில் புறப்படவில்லை.
4 மணி நேரத் தவிப்பு
விமானம் ஏன் கிளம்பவில்லை என்று கேட்டதற்கு, விமான நிறுவனத் தரப்பில் இருந்து சரியான பதில் வரவில்லை எனக் கூறப்படுகிறது. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக விமான நிலையத்தில் காக்க வைக்கப்பட்டதால் சிராஜ் பொறுமை இழந்தார்.
இதுகுறித்து நள்ளிரவில் தனது 'X' தளத்தில் பதிவிட்ட அவர், "கவுகாத்தியிலிருந்து ஹைதராபாத் செல்ல வேண்டிய விமானம் 7:25-க்குக் கிளம்ப வேண்டும். ஆனால் விமான நிறுவனத்திடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. மீண்டும் மீண்டும் கேட்டதற்கு, காரணமே சொல்லாமல் தாமதப்படுத்தினர். இது மிகவும் வெறுப்பளிக்கிறது. 4 மணி நேரமாக அப்டேட் இல்லாமல் தவிக்கிறோம். இது ஒரு மிக மோசமான அனுபவம். யாரும் இந்த விமானத்தில் பயணிக்க வேண்டாம்" என்று கோபமாகப் பதிவிட்டார்.
ஏர் இந்தியா விளக்கம்
சிராஜின் இந்தப் பதிவு பரவியதை தொடர்ந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் உடனடியாகப் பதிலளித்தது. அதில், "சிரமத்திற்கு மிகவும் வருந்துகிறோம் மிஸ்டர் சிராஜ். எதிர்பாராத தொழில்நுட்பக் காரணங்களால் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் உள்ள எங்கள் குழுவினர் பயணிகளுக்குத் தேவையான மாற்று ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். உங்களது பொறுமைக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்து, 'ஒயிட்வாஷ்' ஆன சோகத்தில் இருந்த சிராஜுக்கு, விமானப் பயணமும் இப்படி அமைந்தது பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications