செஞ்சுரியன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ள டெஸ்ட் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா இதுவரை டெஸ்ட் போட்டியில் ஆடாத வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை ஆட வைப்பது உறுதி என கூறப்படுகிறது.
அவரை தென்னாப்பிரிக்கா அழைத்து சென்றதே டெஸ்ட் தொடரில் ஆட வைக்கத் தான் எனவும், அவர் 6 அடி 5 அங்குலம் உயரம் கொண்டவர் என்பது தான் ரோஹித் சர்மாவின் இந்த முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.

உயரமான வேகப் பந்துவீச்சாளரை ஆட வைக்க வேண்டும். அவருக்கு அனுபவமே இல்லை என்றாலும் பரவாயில்லை என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் - கேப்டன் ரோஹித் சர்மா எடுத்த இந்த முடிவுக்கு பின் முக்கியமான காரணம் ஒன்று உள்ளது.
கடந்த 2018 இல் தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 - 1 என தோல்வி அடைந்து இருந்தது. தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதே இந்திய அணிக்கு பெரிய சாதனை ஆகும்.
ஆனால், 2020இல் தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியா ஆடிய டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இதில் முக்கிய வித்தியாசமாக இருந்தது வேகப் பந்துவீச்சாளர்கள் தான். 2018இல் இந்திய அணியில் 6' 4 உயரம் கொண்ட இஷாந்த் சர்மா, 6' 2 உயரம் கொண்ட ஹர்திக் பாண்டியா, பும்ராவுடன் இடம் வேகப் பந்துவீச்சாளர்களாக இடம் பெற்று இருந்தனர்.
ஆனால், 2020 டெஸ்ட் தொடரின் போது முகமது ஷமி, பும்ரா, ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ் இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர்களாக இடம் பெற்றனர். இவர்களில் ஒருவர் கூட 6 அடியை தாண்டிய உயரம் கிடையாது. ஆனால், அந்த டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணியில் 6' 8 உயரம் கொண்ட மார்கோ ஜான்சென் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தார். தென்னாப்பிரிக்க அணியில் வேகப் பந்துவீச்சாளர்கால் மாறினாலும் ஒவ்வொரு முறையும் அந்த அணியில் 6 அடிக்கும் அதிக உயரம் கொண்ட வேகப் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவங்களை வைத்து உயரமான பந்துவீச்சாளர்களால் தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் எளிதாக பவுன்ஸ் வீச முடிகிறது என்பதையும், அது டெஸ்ட் தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதையும் உறுதி செய்த ரோஹித் சர்மா - ராகுல் டிராவிட் கூட்டணி, இந்திய அணியிலும் ஒரு 6 அடி உயர வேகப் பந்துவீச்சாளர் வேண்டும் என முடிவு செய்தனர்.
துரதிர்ஷ்டவசமாக டெஸ்ட் போட்டிகளில் பந்து வீசிய அனுபவ வேகப் பந்துவீச்சாளர்கள் யாரும் இப்போதைக்கு அணியில் இல்லை என்பதால் இந்திய அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடி உள்ள வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை டெஸ்ட் அணியில் ஆட வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து முதல் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக பும்ரா, சிராஜ் அல்லது ஷர்துல் தாக்குர் உடன் பிரசித் கிருஷ்ணா வேகப் பந்துவீச்சாளராக இடம் பெற வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. ஸ்விங் பந்து வீசக் கூடிய மற்றொரு வேகப் பந்துவீச்சாளர் முகேஷ் குமாருக்கு வாய்ப்பு குறைவு தான். முகேஷ் குமார் ஆறு அடிக்கும் குறைவான உயரம் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.