IND vs SA : அடுத்தடுத்து 2 சிக்ஸ்.. கிளாசிக் சதமடித்த கேஎல் ராகுல்.. இந்திய மானம் காத்த குட்டி கோலி!
சென்சுரியன்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்சுரியனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அனி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் சேர்த்திருந்தது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் 70 ரன்களுடனும், சிராஜ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. அதிகாலையில் பெய்த மழை காரணமாக மைதானத்தில் அவுட் ஃபீல்ட் ஈரமாக இருந்ததால், 25 நிமிடங்கள் தாமதமாக தொடங்கப்பட்டது. ஆட்டம் தொடங்கிய போதே கேஎல் ராகுல் சதம் விளாசுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதன்பின் 2ஆம் நாளின் முதல் ஓவரில் 2 ரன்கள் சேர்த்த சிராஜ், அதன்பின் கேஎல் ராகுலிடம் ஸ்ட்ரைக்கில் கொடுப்பதில் கவனமாக இருந்தார்.
இன்னொரு பக்கம் ஸ்ட்ரைக்கில் வந்த கேஎல் ராகுல் பவுண்டரிகளாக விளாசி அசத்தினார். ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி விளாசுவதை வழக்கமாக்கிய கேஎல் ராகுல், சிராஜிடம் அவ்வளவு எளிதாக ஸ்ட்ரைக்கில் கொடுக்கவில்லை. அதிலும் ரபாடா வீசிய ஒரு ஓவரில் பவுண்டரி மற்றும் சிக்சர் விளாசி கேஎல் ராகுல் சதத்திற்கு அருகில் சென்றார்.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணியின் இளம் வீரர் கோட்சியே வீசிய ஓவரில் சிராஜ் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் வந்த பிரசித் கிருஷ்ணா ஆட்டமிழக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால், பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் விக்கெட் கீப்பர் அசந்த நேரமாக பார்த்து 3வது பந்திலேயே கேஎல் ராகுல் மறுமுனைக்கு ஓடினார்.
இதையடுத்து கோட்சியே 2 பவுன்சர் பந்துகளை வீச, மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல் கேஎல் ராகுல் ஒரு ரன் எடுப்பதை தடுக்க ஃபீல்டர்கள் அருகில் கொண்டு வரப்பட்டனர். ஆனால் கேஎல் ராகுல் மிரட்டலாக ஒரு சிக்சரை விளாசி, தனது 8வது சதத்தை விளாசினார். அதுமட்டுமல்லாமல் சென்சுரியன் மைதானத்தில் கேஎல் ராகுல் அடிக்கும் 2வது சதமாகும்.
அதேபோல் வெளிநாடுகளில் கேஎல் ராகுல் அடிக்கும் 7வது சதம் இதுவாகும். இதன்பின் பர்கர் வீசிய ஓவரில் 101 ரன்கள் எடுத்து கேஎல் ராகுல் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய அவர் 137 பந்துகளில் 4 சிக்ஸ், 14 பவுண்டரிகள் உட்பட 101 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ரபாடா 5 விக்கெட்டுகளையும், பர்கர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Story first published: Wednesday, December 27, 2023, 14:54 [IST]
Other articles published on Dec 27, 2023


Click it and Unblock the Notifications