அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மா மெதுவாக ரன்கள் சேர்ப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. எப்போதும் அதிரடியாக விளையாடும் இந்திய அணியில் ஏன் இந்த மாற்றம் நிகழ்ந்தது என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் திலக் வர்மாவின் நிதானமான பேட்டிங், அணி நிர்வாகத்தின் திட்டமிட்ட ஒரு உத்தி தான் என்று இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.அதிரடி துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா பேட்டிங்கில் சோபிக்காத போதும், திலக் மீது தனக்கு முழு நம்பிக்கை உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சவாலான,ஆடுகளங்களில் பந்து நின்று வரும் போது திலக் சற்று திணறியதும், மிடில் ஓவர்களில் பெரிய ஷாட்களுக்கு முயற்சிக்காமல், நிலைத்து நின்று ஆட்டத்தைக் கொண்டுசெல்லும் அவரது பாணியும் தொடர்ந்து பல கேள்விகளை எழுப்பியுள்ளன. குறிப்பாக, டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றுகள் நெருங்கும் இந்த வேளையில், இந்த விவாதம் பரவலாகப் பேசப்படுகிறது.
எனினும், திலக்கின் இந்த பேட்டிங் முறை பற்றி கவலைப்படத் தேவையில்லை என கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கமளித்தார். துவக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகும் பட்சத்தில், நடுவரிசையில் களமிறங்கி ஆட்டத்தை நிலைநிறுத்துமாறு திலக்கிற்கு அணி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாக சூர்யகுமார் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து பேசிய சூர்யகுமார், “அணி நிர்வாகம் அவரை அவ்வாறு விளையாடச் சொல்லியுள்ளது. ஒரு விக்கெட் விழுந்தால், அவர் பவர்ப்ளேயில் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். ஆனால், இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தால், அவர் சற்று நிதானமாக விளையாடி, ஒரு பார்ட்ன்ர்ஷிப்பை உருவாக்கி, 10வது ஓவர் வரை நிலைத்து நிற்க வேண்டும். அதன் பிறகு பந்துவீச்சை எதிர்கொள்ள எங்களிடம் போதுமான பலம் உள்ளது,” என்றார்.
“தற்போதைய தனது பேட்டிங் திறனில் திலக் திருப்தி அடையவில்லை என்பதை நான் அறிவேன். கடந்த 2-3 பயிற்சி செஷனில் அவர் தீவிரமாகப் பயிற்சி செய்துள்ளார். ஆனாலும், அவர் குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை. இந்தியாவுக்காக 3வது இடத்தில் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் நிச்சயம் மேம்படுவார் என்பதில் உறுதியாக இருக்கிறேன்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.